மாமல்லபுரம்: மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு செல்லும் நடைபாதையில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் மின்விளக்குகள் முழுமையாக எரிவதில்லை. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் நடைபாதையில் நடக்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவற்றை முழுமையாக சீரமைத்து முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
சர்வதேச புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் கடந்த 7ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்ட வெண்ணெய் உருண்டை கல், அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்பட பல்வேறு புராதன சிற்பங்கள் இன்றளவும் மிடுக்குடன் சுற்றுலா பயணிகளின் மனங்களை கவர்ந்து வருகின்றன. இவற்றை காண்பதற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
எனினும், கடற்கரை கோயிலில் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்கு தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக கடற்கரை கோயிலுக்கு செல்லும் நடைபாதையில், கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் மின்விளக்குகள் முழுமையாக எரிவதில்லை. இதனால் அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அங்கு போதிய வெளிச்சம் இல்லாததால், மாலை 6 மணிக்குமேல் வரும் சுற்றுலாப் பயணிகள், மின்விளக்கு ஒளியில் கடற்கரை கோயிலை கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தும் நடைபாதையை ஒட்டிய இருக்கையில் மோதி படுகாயமடைந்து வருகின்றனர்.
மேலும், கடற்கரை கோயிலுக்கு செல்லும் நடைபாதையில் இரவு நேரங்களில் மின்விளக்கு எரியாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, நகை பறிப்பு உள்பட பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகளிடம் பலமுறை சுற்றுலா பயணிகள் புகார் கொடுத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, இம்மாதம் முதல் வரும் மார்ச் வரை சீசன் என்பதால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் தொல்லியல் துறையின் வருவாய் அதிகரிக்கும். இவற்றை கருத்தில் கொண்டு, நடைபாதையில் எரியாத மின்விளக்குகளை உடனடியாக சீரமைத்து, முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
The post மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் மின்விளக்கு எரியாமல் இருளில் மூழ்கிய நடைபாதை: சுற்றுலா பயணிகள் அவதி appeared first on Dinakaran.