- திருவண்ணாமலை- தருமபுரி மாவட்டம்
- Sengam
- பஞ்சாயத்து குழு
- திருவண்ணாமலை-தர்மபுரி மாவட்டம்
- திருவண்ணாமலை மாவட்டம்
*மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆய்வு
செங்கம் : செங்கம் அருகே திருவண்ணாமலை- தர்மபுரி மாவட்டத்தை இணைக்கும் 2 கி.மீ.தூரம் வனச்சாலை அமைப்பதற்கான இடத்தை மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த நீப்பத்துறை ஊராட்சி கொட்டாவூர் பகுதி வழியாக தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா வேடக்கட்டமடுவு ஊராட்சி கருங்காலிபாடி கிராமத்திலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வரை அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. அரசு பேருந்து செல்லும் வழியில் சுமார் 2 கி.மீ தொலைவு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் எல்லை முழுவதும் வனப்பகுதியாக உள்ளது.
வனப்பகுதியில் சாலை அமைக்க முடியாமல் மழைக்காலங்களில் பேருந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதனை போக்கும் விதமாக செங்கம் எம்எல்ஏ மு.பெ. கிரிக்கு வேடகட்டமடுவு மற்றும் கருங்காலிபாடி மக்கள் வன பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். அதன் அடிப்படையில் எம்எல்ஏ மு.பெ.கிரி, வனத்துறை மற்றும் ஒன்றிய பொறியாளர் ஆகியோருக்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதி சாலையை ஊராட்சி நிர்வாகத்திற்கு ஒப்படைத்து வனத்துறைக்கு ஊராட்சி நிர்வாகம் எடுக்கும் இடத்தினை வனத்துறை அதிகாரிகள் கேட்கும் அளவு இடத்தினை ஊராட்சி நிர்வாகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்நிலையில், செங்கம் எம்எல்ஏ ஆலோசனையின் பேரில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் வனத்துறை அலுவலர் கோவிந்தன் மற்றும் ஒன்றிய பொறியாளர் வினோத்குமார் ஆகியோர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு திருவண்ணாமலை மாவட்டமும் தர்மபுரி மாவட்டமும் இணைக்க கூடிய 2 கி.மீ.தூரம் உள்ள வனப் பகுதியை நேரடியாக ஆய்வு செய்தனர்.
அப்போது இரண்டு கி.மீ தொலைவில் வனப்பகுதி சாலை அமைப்பதற்கான இடம் வனத்துறை மூலம் வழங்கப்பட்டு, வனத்துறை வளாகம் இடத்திற்கு ஈடாக ஊராட்சியில் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தினை ஊராட்சி நிர்வாகம் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகத்தினர், அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் ராசுக்குட்டி, திமுக நிர்வாகிகள் அன்பு, கோகுலவாணன், குண்டுராவ், முத்து, மோகன்ராஜ், பால் குமரேசன் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
The post செங்கம் அருகே திருவண்ணாமலை- தர்மபுரி மாவட்டம் இணைக்கும் 2 கி.மீ. தூரம் வனச்சாலை அமைப்பதற்கான இடம் appeared first on Dinakaran.