×
Saravana Stores

நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு போட் அவுசில் படகு பற்றாக்குறையால் நீண்டநேரம் காத்திருக்கும் சுற்றுலா பயணிகள்

*பழுதான படகுகளை சரிசெய்ய கோரிக்கை

தவளக்குப்பம் : புதுச்சேரி நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு போட் அவுசில் படகு பற்றாகுறையால் சுற்றுலா பயணிகள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே, பழுதாகி பல வருடங்களாக கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளை சரிசெய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரி- கடலூர் மெயின் ரோட்டில் நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு கடலுடன் கலக்கும் இடத்தில் இயற்கையான மணல் திட்டு உள்ளது. இந்த பகுதியில் நோணாங்குப்பம் படகு குழாம் கடந்த 1990ல் அமைக்கப்பட்டது. புதுச்சேரி நகரில் இருந்து 7 கி.மீ தொலைவில் இயற்கை எழிலுற இப்படகு குழாம் அமைந்துள்ளது. புதுச்சேரி அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் செயல்படும் இப்படகு குழாம் 4 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. ‘பாரடைஸ் பீச்’ என அழைக்கப்பட்டுள்ள இந்த படகு துறையில் ஸ்பீட் போட், மோட்டார் போட், பெடல் போட் என பல வகையான படகுகள் உள்ளன.

இப்படகு குழாமில் இருந்து பாரடைஸ் பீச்சுக்கு சுற்றுலா பயணிகள் படகு சவாரி சென்று ஆனந்த குளியல் போட்டு மகிழ்வர். மேலும் அங்கு குதிரை மற்றும் ஒட்டக சவாரி, சிறுவர்- சிறுமியர் குதித்து விளையாடும் காற்று பலூன், இசையுடன் ஆனந்த குளியல் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளது. இதனால் இந்த படகு பயணம் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கிறது.

சாதாரண நாட்களில் சுமார் 500ல் இருந்து 1000 பேர் வரை வருவர். பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்களில் 3 ஆயிரம் பேர் வரை வருகின்றனர்.
இந்நிலையில் வாரயிறுதி விடுமுறை தினமான நேற்றும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். ஆனால் படகு குழாமில் போதுமான படகு இல்லை. பாரடைஸ் பீச்சுக்கு சென்றுள்ள படகுகள் திரும்ப வரும் வரை நீண்டநேரம் வரிசையில் காத்திருந்தனர். 3 பெரிய படகுகள், ஸ்பீடு போட் உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட படகுகள் ஆரம்பத்தில் இயங்கிவந்த நிலையில் தற்போது ஒரு பெரிய படகு மற்றும் சில சிறிய படகுகள் மட்டுமே இயங்கி வருகிறது.

மீதமுள்ள 2 பெரிய படகுகள் மற்றும் 40 பேர், 20 பேர் பயணிக்கக்கூடிய படகுகள் என 10க்கும் மேற்பட்ட படகுகள் பழுதாகி, பல வருடங்களாக கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனை பழுது நீக்கி செயல்பாட்டிற்கு கொண்டு வந்தால் சுற்றுலா பயணிகள் சிரமமின்றி சென்று வர ஏதுவாக இருக்கும். மேலும், அரசுக்கும் பல லட்சம் வருமானம் கிடைப்பதுடன், அரசு ஊழியர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது சுற்றுலா பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

The post நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு போட் அவுசில் படகு பற்றாக்குறையால் நீண்டநேரம் காத்திருக்கும் சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Nonangkuppam ,Sunnambaru ,Boathouse ,Thavalkuppam ,Puducherry ,Nonangkuppam Sunnambaru Boat House ,Sunnambaru Boat House ,Dinakaran ,
× RELATED நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு போட்...