திருவாடானை, அக்.7: திருவாடானை அருகே நெய்வயல் ஊராட்சி, இலுப்பக்குடி, மணப்புஞ்சை, சீர்தாங்கி, மடத்தேந்தல் உள்ளிட்ட 4 கிராமங்களில் 250க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இவர்கள், மாதந்தோறும் சுமார் 4 கிலோ மீட்டர் தூரமுள்ள நெய்வயல் கிராமத்திற்கு செல்லும் சூழல் ஏற்பட்டதால், கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்துள்ளனர். இதனால் இந்த 4 கிராமங்களை உள்ளடக்கிய இலுப்பக்குடி பகுதியில் பகுதிநேர ரேஷன் கடை அமைத்துதர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், திருவாடானை வட்டாட்சியருக்கும் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்நிலையில் அந்த 4 கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று இலுப்பக்குடி பகுதியில் பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டது. விழாவிற்கு எம்எல்ஏ கருமாணிக்கம் தலைமை தாங்கி திறந்து வைத்தார். வட்ட வழங்கல் அலுவலர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்வில் திருவாடானை யூனியன் சேர்மன் முகம்மது முக்தார், திமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் பதனக்குடி ரவி, காங்கிரஸ் நகரத்தலைவர் செந்தில்குமார், வட்டார தலைவர்கள் பதனக்குடி தட்சிணாமூர்த்தி, கோடனூர் கணேசன் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post திருவாடானை அருகே புதிய ரேஷன் கடை திறப்பு appeared first on Dinakaran.