×

போதிய ரயில்கள் இயக்கப்படாததால் பறக்கும் ரயில்களில் முண்டியடித்த கூட்டம்: மும்பை போல் காட்சியளித்த சென்னை

* தண்டவாளத்தில் நடந்தே சென்ற பயணிகள், ரயில்வே நிர்வாகம் மீது குற்றச்சாட்டு

சென்னை: மெரினா கடற்கரையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான மக்கள் வந்த நிலையில், தெற்கு ரயில்வே போதிய ரயில்களை இயக்காததால், கூட்ட நெரிசலில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அரை மணி நேரத்திற்கு ஒரு ரயில் இயக்கப்பட்டதால், பொறுமை இழந்த பலர் தண்டவாளத்தில் ஆபத்தான முறையில் நடந்து சென்ற காட்சி அனைவரையும் பதைபதைக்க வைத்தது.

இந்திய விமான படையின் 92வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நேற்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 72 விமானங்களில் வீரர்கள் சாகச நிகழ்ச்சியை நடத்தி அசர வைத்தனர். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த சாகச நிகழ்வை காண, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மின்சார ரயில், பேருந்துகளில் மெரினாவுக்கு வந்தனர்.

இதனால், அனைத்து ரயில், பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதை கருத்தில் கொண்டு, மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதலாக பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் இயக்கப்பட்டன. ஆனால், இந்த நிகழ்ச்சிக்காக தெற்கு ரயில்வே கூடுதல் ரயில்களை இயக்கவில்லை. குறிப்பாக, வேளச்சேரி – சிந்தாதிரிப்பேட்டை இடையிலான பறக்கும் ரயில் வழித்தடத்தில், அரை மணிநேரத்திற்கு ஒரு ரயில் மட்டுமே இயக்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது.

குறிப்பாக, வேளச்சேரி, திருவான்மியூர், திருவான்மியூர், சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ரயிலுக்காக காத்திருந்தனர். ரயில்களில் அளவுக்கு அதிகமாக மக்கள் முண்டியடித்து ஏறினர். இளைஞர்கள் பலர் தொங்கிக்கொண்டே பயணம் செய்தனர். இதனால், அசம்பாவிதம் ஏற்படும் சூழல் நிலவியது. குறிப்பாக, சிறுர்கள், குழந்தைகளுடன் வந்த பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கி கடும் அவதிக்குள்ளாகினர். இளைஞர்கள் பலர் ரயில் ஜன்னல் மீது நின்றபடி ஆபத்தான முறையில் பயணித்தனர்.

கூட்டத்தை கட்டுப்படுத்த ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் கூட இல்லாதது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.  ரயில் வர நீண்ட நேரம் ஆனதால், சிலர் தண்டவாளங்களில் இறங்கி நடக்க ஆரம்பித்தனர். இந்த சம்பவம் அனைவரையும் பதைபதைக்க செய்தது. கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்த நிலையில், சில இடங்களில் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர், சென்னை மெரினா கடற்கரைக்கு விமான சாகச நிகழ்வை பார்க்கச் செல்லாமல் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர்.

அதேபோல், விமான சாகச நிகழ்வு முடிந்த பின்னர், வீடு திரும்பிய பொதுமக்களால் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி ரயில் நிலையங்களிலும் மிகக் கடுமையான கூட்டம் காணப்பட்டது. இதனால், நேற்றைய தினம் பறக்கும் ரயில் நிலையங்கள் மும்பை ரயில் நிலையம் போல் காணப்பட்டது.

வழக்கமாக, பறக்கும் ரயில்கள் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை இயக்கப்படுகிறது. நேற்றைய தினம் மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என முன்னதாகவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகியும், தெற்கு ரயில்வே நிர்வாகம் கூடுதல் ரயில்கள் இயக்காததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

* தானியங்கி கதவை மூட முடியாதபடி மெட்ரோ ரயில்களில் கடும் நெரிசல்
வடசென்னைக்கு உட்பட்ட திருவொற்றியூர், தண்டையார்பேட்டை போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் விமான சாகசத்தை காண, நேற்று மெட்ரோ ரயிலில் மெரினாவுக்கு படையெடுத்தனர். அதிகப்படியானோர் ரயிலில் பயணித்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக தேரடி, காலடிப்பேட்டை போன்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் பொதுமக்கள் மெட்ரோ ரயிலில் பயணிக்க டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட வரிசையில் நின்றனர்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் மெட்ரோ ரயில் தானியங்கி கதவை மூட முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர், கூட்டத்தை போலீசார் முறைப்படுத்தினர். அதுமட்டுமின்றி மாநகரப் பேருந்து, கார் போன்ற வாகனங்கள் அதிகளவில் சென்றதால் சுங்கச்சாவடி, காலடிப்பேட்டை போன்ற இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

The post போதிய ரயில்கள் இயக்கப்படாததால் பறக்கும் ரயில்களில் முண்டியடித்த கூட்டம்: மும்பை போல் காட்சியளித்த சென்னை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mumbai ,Marina beach ,Southern Railway ,Dinakaran ,
× RELATED மெரினா கடற்கரையில் தமிழ்நாடு...