தர்மபுரி, அக்.7: தர்மபுரி மாவட்டத்தில், சீதோஷ்ணநிலை மாற்றத்தால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து சரிந்துள்ளது. நேற்று உழவர் சந்தையில் ஒரு கிலோ ₹50க்கு விற்பனை செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில், ஆண்டு முழுவதும், சுழற்சி முறையில் 30 ஆயிரம் ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது 5 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்து, 60 டன் தக்காளி அறுவடை செய்யப்படுகிறது. இங்கிருந்து சேலம், திருச்சி, சென்னை மற்றும் வெளி மாவட்டங்களுக்கும், கேரளா பாலக்காட்டிற்கு தக்காளி விற்பனைக்கு செல்கிறது. இம்மாவட்டத்தில் தர்மபுரி, பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், இருமத்தூர், கம்பைநல்லூர், பென்னாகரம், அதகப்பாடி, மொரப்பூர் உள்ளிட்ட இடங்களில் தக்காளி அதிகளவில் சாகுபடி செய்து, சந்தைக்கு சராசரியாக 100 டன் தக்காளி விற்பனைக்கு வருகிறது.
ஆனால், தற்போது 60 டன் தக்காளி மட்டும் கொண்டு வரப்படுகிறது. வெயில் மற்றும் போதிய தண்ணீர் இன்றி சந்தைக்கு தக்காளி வரத்து சரிந்தது. தற்போது உள்ளூர் தேவைக்கு போக வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலத்திற்கு தர்மபுரி மாவட்டத்தில் இருந்து தக்காளி செல்கிறது. உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ ₹50க்கும், வெளிமார்க்கெட்டில் ₹65 வரை விற்பனையானது. விலை உயர்தாலும், புரட்டாசி மாதம் என்பதால் தக்காளியை பொதுமக்கள் வாங்கி சென்றனர். நேற்று 10 டன் தக்காளி விற்பனை செய்யப்பட்டது. இதற்கு முன்பு 15 டன் வரை விற்பனையான நிலையில்,, தற்போது விளைச்சல் பாதிப்பால் விலை சற்று உயர்ந்துள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
The post தக்காளி விளைச்சல் பாதிப்பு appeared first on Dinakaran.