புதுடெல்லி: பாஜ ஆட்சியின் தீங்கு விளைவிக்கும் பொருளாதார போக்குகளால் இந்திய பொருளாதார வளர்ச்சியை 3 கருமேகங்கள் சூழ்ந்துள்ளன என் காங்கிரஸ் கடுமையாக தாக்கி உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை வௌியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்திய பொருளாதாரத்தை 3 கருமேகங்கள் சூழ்ந்துள்ளன. முதலாவதாக, “கொரோனா பெருந்தொற்று காலத்துக்கு பிறகு, கடந்த 2022-23ம் ஆண்டில் தனியார் துறை முதலீடுகளில் ஒரு சிறிய எழுச்சிக்கு பிறகு முதலீடுகள் ஒரு நிலையற்ற பாதைக்கு திரும்பி விட்டன.
2023-24 நிதியாண்டில் தனியார் துறைகளின் புதிய திட்ட அறிவிப்புகள் 21 சதவீதம் குறைந்துள்ளது. இது இந்தியாவின் நுகர்வோர் சந்தைகள் மீது முதலீட்டாளர்களின் நம்பிக்கையின்மை, அரசாங்கத்தின் சீரற்ற கொள்கை உருவாக்கம் மற்றும் ரெய்டு அரசு ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட நிச்சயமற்ற முதலீட்டு சூழலை பிரதிபலிக்கிறது. இந்த சூழலில் நிறுவனங்கள் தங்கள் வணிகத்தை வளர்ப்பதை விட கடன் சுமைகளை குறைக்க லாபத்தை பயன்படுத்துகின்றன.
இரண்டாவது, அரசாங்கத்தின் இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் உற்பத்தித்துறை மிகவும் தேக்கமடைந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியை எடுத்து கொண்டால் 10 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை போலவே தற்போதும் இருக்கிறது. மொத்த வேலைவாய்ப்பின் பங்காக உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. உலகளாவிய ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு பெருமளவு தேக்கமடைந்துள்ளது.
மன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த காலகட்டத்தில் உலகளாவிய ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு அபரிமிதமாக வளர்ச்சி அடைந்தது. ஆடைகள் போன்ற உழைப்பு அதிகம் உள்ள துறைகளில் கடந்த 2013-14ல் 15 பில்லியன் டாலராக இருந்தது. இது 2023-24ல் 14.5 பில்லியன் டாலராக சரிந்துள்ளது. இவ்வாறு உற்பத்தி சுருங்குவதற்கு பிரதமர் மோடியின் வர்த்தக கொள்கைகளே காரணம். மூன்றாவதாக, 2022-23ம் ஆண்டுக்கான சமீபத்திய ஆண்டு தொழில் ஆய்வு இந்திய தொழிலாளர்களின் உண்மையான ஊதியம் மற்றும் உற்பத்தி திறன் சரிவை வௌிப்படுத்தியது.
ஒரு தொழிலாளிக்கான தொழிலாளர் உற்பத்தி திறன் அளவீடு எனப்படும் ஜிவிஏ 2014-15ம் ஆண்டில் 6.6 சதவீதமாக இருந்த நிலையில் 2018-19ம் ஆண்டுக்குள் 0.6 சதவீதமாக குறைந்து விட்டது. கொரோனா தொற்று காலத்துக்கு பிறகு 2023ம் நிதியாண்டில் தொழிலாளர் உற்பத்தி திறன் மீண்டும் சரிவடைந்தது. இது அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு மத்தியில் தொழிலாளரின் ஊதிய விகிதத்தை பெரிதும் பாதித்துள்ளது. இதனால் நுகர்வு பலவீனமாக இருக்கும். அதன் விளைவாக ஏற்படும் குறைந்த முதலீடுகள் இந்தியாவின் நிலையான வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்.
இவை அனைத்தும் கடந்த சில வாரங்களில் வௌிப்பட்ட பிரச்னைகளாகும். ஆனால் கடந்த 10 ஆண்டுகள் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் உள்ளிட்ட ஏராளமான தீங்கு விளைவிக்கும் பொருளாதார போக்குகளை கொண்டுள்ளது. ஆனால் உயிரியல் பிறப்பல்லாத பிரதமர் மோடியும், அவருக்கு தாளம் போடுபவர்களும் பொருளாதார வளர்ச்சி பற்றிய அபத்தமான கூற்றுகளை முன்வைக்கின்றனர். தற்போதுள்ள பிரச்னைகளை தீவிரமாக எடுத்து கொள்ளாவிட்டால் அது வரும் ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முடக்கி விடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post பாஜ ஆட்சியின் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரத்தை 3 கருமேகங்கள் சூழ்ந்து விட்டன: காங்கிரஸ் கடும் தாக்கு appeared first on Dinakaran.