- தமிழ்நாடு பட்டாசு வியாபாரிகள் சங்கம்
- சிவகாசி
- தமிழ்நாடு பட்டாசு வியாபாரிகள் சங்கம்
- ராஜசந்திரசேகரன்
- தமிழ்நாடு பட்டாசு சங்கம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சிவகாசி: ஆன்லைன் பட்டாசு வியாபாரத்தில் மோசடி நடக்கிறது. கவர்ச்சிகரமான விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம் என தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் ராஜாசந்திரசேகரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் பல மாவட்டங்களில் நிரந்தர பட்டாசு கடை உரிமங்கள் புதுப்பித்து வழங்கப்பட்டு, வணிகர்கள் தீபாவளி பண்டிகை கால விற்பனைக்கான ஆயத்த பணிகளை செய்து வருகின்றனர். விரைவில் உரிமம் வழங்கிய தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் சார்பாக நன்றி. அரியலூர், திருவள்ளூர், கடலூர் உட்பட இன்னும் ஒருசில மாவட்டங்களில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த மாவட்டங்களிலும் விரைவில் அனுமதி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிக பட்டாசு கடை உரிமங்கள் தீபாவளி பண்டிகைக்கு 15 தினங்களுக்கு முன்பாக வழங்கப்பட வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில் ஆன்லைன் வர்த்தகம் அனைத்து வணிகர்களுக்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களால் அரசிற்கு எவ்வித வருவாயும் கிடையாது. உச்சநீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் ஆன்லைன் பட்டாசு வணிகத்துக்கு தடை விதித்துள்ளது. ஆனால் குறைந்த முதலீட்டில் பலர் சட்டவிரோதமாக ஆன்லைன் வர்த்தகம் செய்து வருகிறார்கள். இதனை தடுக்க தேவையான நடவடிக்கையை ஒன்றிய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். ஆன்லைன் மூலம் ஏராளமான பொதுமக்கள் ஏமாந்து, மோசடி செய்யப்பட்டதாக கூறி பணத்தை இழந்து வருகின்றனர். இதுகுறித்து ஏராளமான புகார்கள் வருகின்றன. அதனை சைபர் கிரைம் போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளோம். கவர்ச்சிகரமான விளம்பரங்களை செய்து 90 சதவீதம் வரை தள்ளுபடியில் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் தரம் இல்லாத பட்டாசுகளை விற்பனை செய்ய வாய்ப்பு இருக்கிறது. எனவே கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். பல இடங்களில் ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை பெற்றுக்கொண்டு பட்டாசுகளை அனுப்பாமல் இருப்பதாக புகார்கள் வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
The post கவர்ச்சி விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம் ஆன்லைன் பட்டாசு வியாபாரத்தில் மோசடி: தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் சங்கம் தகவல் appeared first on Dinakaran.