×
Saravana Stores

2 மாநில சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்தது அரியானா, காஷ்மீரில் காங். ஆட்சியை பிடிக்கும்: பாஜ படுதோல்வி அடையும்

புதுடெல்லி: சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ள அரியானாவில் ஆளும் பாஜவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. காஷ்மீரிலும் காங்கிரஸ், தேசிய மாநாடு கட்சி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அரியானா, காஷ்மீர் மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியை கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி ஜம்மு காஷ்மீரில் 90 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டமாக நடத்தப்பட்டது. 10 ஆண்டுக்குப் பிறகு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டதாலும், சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு நடந்த முதல் சட்டப்பேரவை தேர்தல் என்பதாலும் இத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தது. தேர்தலையொட்டி, 400 கம்பெனி பாதுகாப்பு படையினர் மற்றும் துணை ராணுவம், போலீசார் குவிக்கப்பட்டனர். செப்.18, செப்.25, அக்.1 என 3 கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் 63.88 சதவீத வாக்குகள் பதிவாகின. இத்தேர்தலில், காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அமைத்தும், பாஜ தனித்தும் போட்டியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அரியானாவில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக பாஜ ஆட்சி செய்து வருகிறது. அங்கு தற்போது முதல்வராக நயாப் சிங் சைனி உள்ளார். இங்கு பா.ஜ, காங்கிரஸ் தவிர ஆம் ஆத்மி, இந்திய தேசிய லோக்தளம்-பிஎஸ்பி, ஜேஜேபி-ஆசாத் சமாஜ் கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. பாஜவின் தொடர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர காங்கிரஸ் தீவிர பிரசாரம் செய்தது. ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா உள்ளிட்ட தலைவர்கள் அரியானாவில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக சூறாவளி பிரசாரம் செய்தனர். மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் மொத்தம் 1031 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது. அரியானா, காஷ்மீரில் பதிவான வாக்குகள் நாளை மறுதினம் எண்ணப்படுகின்றன.

அரியானாவில் நேற்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்ததையடுத்து, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. அரியானாவை பொறுத்தவரை அங்கு தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கிறது என்று பெரும்பாலான கருத்துகணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கூட்டணிக்கு அழைத்தும் மறுப்பு தெரிவித்து தனியாக போட்டியிட்ட ஆம்ஆத்மி கட்சிக்கு இந்த தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்காது என்றும் தெரியவந்துள்ளது. அரியானா தேர்தலில் நடத்தப்பட்ட 7 கருத்துகணிப்புகளும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்பதை கணித்துள்ளன. அனைத்து கருத்து கணிப்புகளும் ஆளும் பாஜ படுதோல்வி அடையும் என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளன. காங்கிரஸ் 51 முதல் 61 இடங்களில் வெற்றி பெறும் என்றும் பாஜவுக்கு 27 முதல் 35 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்று ரிபப்ளிக் டிவி கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. இந்திய தேசிய லோக் தளத்துக்கு 3 முதல் 6 தொகுதிகள் கிடைக்கும். அரியானாவில் வாக்குப்பதிவுக்கு பின் நடத்தப்பட்ட 7 கருத்துகணிப்புகளில் சராசரியாக காங்கிரசுக்கு 54 தொகுதிகளும், பாஜவுக்கு 27 தொகுதிகளும், இந்திய தேசிய லோக் தளத்துக்கு 3 இடங்களும், இதர கட்சிகளுக்கு 6 தொகுதிகளும் கிடைக்கும். இங்கு ஆட்சி அமைக்க 46 இடங்கள் தேவை.

காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. பீப்பிள்ஸ் பல்ஸ் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் இந்த கூட்டணிக்கு 46 முதல் 50 தொகுதிகள் கிடைக்கும் என்றும், பாஜவுக்கு 23 முதல் 27 தொகுதிகளும், மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சிக்கு 7 முதல் 11 இடங்களும் இதர கட்சிகளுக்கு 4 முதல் 6 தொகுதிகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா டுடே நடத்திய கருத்துகணிப்பின் படி காங்கிரஸ் கூட்டணிக்கு 40 முதல் 48 இடங்களும், பாஜவுக்கு 27 முதல் 32 இடங்களும், மக்கள் ஜனநாயக கட்சிக்கு 6 முதல் 12 இடங்களும் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. ஆனால், தைனிக் பாஸ்கர் மட்டும் காஷ்மீரில் தொங்கு சட்டப்பேரவை ஏற்படும் என்று கணித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணிக்கு அதிகபட்சமாக 40 இடங்கள் தான் கிடைக்கும் என்றும், பாஜவுக்கு 25 தொகுதிகள் கிடைக்கும் என்று இதர கட்சிகளுக்கு 18 தொகுதியில் வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

The post 2 மாநில சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்தது அரியானா, காஷ்மீரில் காங். ஆட்சியை பிடிக்கும்: பாஜ படுதோல்வி அடையும் appeared first on Dinakaran.

Tags : Congress ,Ariana, Kashmir ,BJP ,New Delhi ,Haryana ,Kashmir ,National Conference alliance ,Ariana, ,Dinakaran ,
× RELATED மதுராந்தகம் நகர காங். தலைவர் தேர்வு