×
Saravana Stores

மேக் -இன்-இந்தியா, 3வது பெரிய பொருளாதாரம், விஸ்வகுரு என பேசினால் மட்டும் போதாது : பிரதமர் மோடியை விமர்சித்த நிதின் கட்கரி

மும்பை : தற்சார்பு பற்றி பேசும் போது, ஒவ்வொரு வரும் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி மீண்டும் பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சித்துள்ளார். மராட்டிய மாநிலம் புனேவில் சத்ரபதி சிவாஜியின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, மேக் -இன்-இந்தியா, 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம், 3வது பெரிய பொருளாதாரம், விஸ்வகுரு என்று பேசி கொண்டு இருந்தால் மட்டும் போதாது என்றார். இவை அனைத்தும் நடைமுறையில் வர வேண்டும் என்றால் மாற்றத்தை நமக்குள் கொண்டு வர வேண்டும் என்று அவர் தெரிவித்தார். மற்றவர்களை மாற சொல்வது மிகவும் எளிது என்றும் ஆனால் அறிவுரைகளை கூறுவதற்கு முன்பு அதனை தன்னிடம் இருந்து தொடங்க வேண்டும் என்று நிதின் கட்கரி கேட்டுக் கொண்டுள்ளார்.

இன்றைய அரசியலில் சாதி, பணம், குற்றங்கள் ஆகியவை நிறைந்து இருப்பதாக குறிப்பிட்ட நிதின் கட்கரி, இவற்றை மாற்ற நல்லாட்சிக்கான சத்ரபதி சிவாஜியின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என்றார். மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட போது, தோல்வி அடைந்தாலும் சாதி அரசியலை செய்யப் போவதில்லை என்ற திட்டவட்டமான நிலைப்பாட்டை எடுத்ததாகவும் கட்கரி தெரிவித்தார். மேக் -இன்-இந்தியா, 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம், 3வது பெரிய பொருளாதாரம், விஸ்வகுரு என பிரதமர் மோடி பேசி வரும் நிலையில், நிதின் கட்கரியின் இந்த பேச்சு பிரதமர் மோடி மீதான மறைமுக விமர்சனமாக கருதப்படுகிறது. ஏற்கனவே மோடியை பெயர் குறிப்பிடாமல் கட்கரி விமர்சித்த நிலையில், மீண்டும் விமர்சித்து இருப்பது பாஜகவுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post மேக் -இன்-இந்தியா, 3வது பெரிய பொருளாதாரம், விஸ்வகுரு என பேசினால் மட்டும் போதாது : பிரதமர் மோடியை விமர்சித்த நிதின் கட்கரி appeared first on Dinakaran.

Tags : Mak ,India ,Vishwakuru ,Nitin Khatkari ,Modi ,Mumbai ,Union Minister ,Chatrapati ,Marathia State ,Pune ,-India ,
× RELATED பழங்குடியினரின் வாழ்க்கையை வரையறுக்கும் தீபாவளி!