வேலூர் : பயணிகள் டிக்கட் பதிவு, பார்சல் சேவை பதிவு உட்பட அனைத்து ரயில்வே சேவைகளையும் ஒரே செயலியில் பெறும் வகையில், ‘சூப்பர் மொபைல் ஆப்’ அடுத்த மூன்று மாதங்களில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ரயில் பயணத்துக்கு 85 சதவீதத்துக்கும் மேற்பட்ட பயணியர், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாக, டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். இது தவிர, சரக்கு ரயில் போக்குவரத்து, ரயில் சுற்றுலா என தனித்தனி செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனால், ரயில்வே பயனாளர்கள் ஒருங்கிணைந்த சேவை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே, ரயில்வேயின் அனைத்து சேவைகளையும், ஒரே செயலியில் பயன்படுத்தும் வகையில், ‘சூப்பர் மொபைல் ஆப்’ எனும் மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டு வருகிறது.இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ‘புதிதாக உருவாக்கப்படும் சூப்பர் மொபைல் ஆப் மூலம் விரைவாக டிக்கெட் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு இல்லாத டிக்கெட் பெற முடியும். டிக்கெட் ரத்து செய்த அடுத்த 24 மணி நேரத்தில் பணம் திரும்ப பெற உதவும். பி.என்.ஆர்., சரிபார்த்தல், ரயில்கள் செல்லும் நிகழ்விடத்தை பார்த்தல், உணவு ஆர்டர், விமான டிக்கெட் முன்பதிவு, ஓய்வறைகள், கால்டாக்சி முன்பதிவு வசதிகளையும் பெறலாம்.
இதேபோல், சரக்கு பார்சல் அனுப்புவது, அதற்கான ஆவணங்களை சமர்ப்பிப்பது, கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட வசதிகளும் இடம்பெறும். இந்த மொபைல் போன் செயலியை உருவாக்கும் பணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அடுத்த மூன்று மாதங்களில் சூப்பர் மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்படும். இந்த ஆப் பயன்பாட்டிற்கு வரும்போது, பயணிகள் அனைத்து வசதிகளையும் ஒரே செயலியில் எளிதில் பெறலாம்’ என்றனர்.
The post ரயில், விமான டிக்கட் முன்பதிவு உட்பட ஒரே மொபைல் ஆப்பில் அனைத்து ரயில் சேவைகள் : தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.