போஸ்னியா: போஸ்னியாவில் (வெள்ளிக்கிழமை) நேற்று பெய்த கனமழையால் நகரங்கள் முழுவதும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சரஜெவோவில் இருந்து தென்மேற்கே சுமார் 70 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள ஜப்லானிகாவில் 24 மணிநேரம் பெய்த மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அங்கு பெய்த கனமழையில் ஜப்லானிகா பகுதியில் நிலச்சரிவில் சிக்கி பலியான 14 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தனர். ஜப்லானிகாவில் தற்போது மக்கள் உள்ளே நுழையவோ வெளியேறவோ முடியாது. சுமார் 4,000 மக்கள் வசிக்கும் நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. அப்பகுதியைச் சேர்ந்த பலரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் காயமடைந்த சிலர் ஐரோப்பிய ஒன்றிய அமைதி காக்கும் படையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் டோன்ஜா ஜப்லானிகா கிராமத்தில் நிலைமை மிகவும் சிக்கலாக இருப்பதாகவும் தெரிவித்தனர். இப்பகுதியில் பல சாலைகள் மற்றும் பாலங்கள் இடிந்து விழுந்தன. சரஜெவோவிற்கு மேற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போஸ்னியாவில் வீடுகள், தோட்டங்கள் மற்றும் கார்கள் தண்ணீருக்கு அடியில் இருந்ததாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் வீடுகளில் சூழ்ந்த வெள்ளத்தால் மக்கள் தவித்து வருகின்றனர்.
The post போஸ்னியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 14 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.