×

மனவெளிப் பயணம்

நன்றி குங்குமம் டாக்டர்

மனநல ஆலோசகர் காயத்ரி மஹதி

மனதைப் புரிய மனிதம் பயில்வோம்!

மனவெளிப் பயணம் என்ற தொடரின் மூலம், மனிதர்களின் அகம் சார்ந்த விஷயங்களைப் பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். இன்றைக்கு மனிதர்களின் மனங்கள் வெளியேதான் அலை பாய்ந்துகொண்டிருக்கிறதே தவிர, அதில் ஏற்படும் உணர்வுகளை மனிதர்கள் கவனிக்கத் தவறி விடுகிறார்கள். இங்கு அனைத்துமே ‘‘நான்” ‘‘நான்” என்கிற அடிப்படையில் தான் நடக்கிறது. திருமூலரின் வாக்குப்படி, உடல் வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே என்ற இடத்தில், உடலுக்கு கொடுக்கப்படும், முக்கியத்துவத்தை மனதிற்கு கொடுப்பதில் உள்ள சிக்கல் எதுவென்றால், தனிநபர் என்ற அடையாளம் பலரையும் நிலைகுலையவைக்கிறது.

அந்தக் காலக்கட்டம் போல் இல்லாமல், இன்றைக்கு சமூக வலைதளத்தில் ஆரம்பித்து லைப் ஸ்கில் ட்ரைனர் மற்றும் எழுத்தாளர்கள் வரை பலரும் மனதின் தன்மைகளைப் பற்றி விதம் விதமாக அவர்களுக்கு தெரிந்த வகையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக தமிழ்நாடு அரசு நடத்தும் இலக்கிய விழாவில் பங்கேற்கும் நிகழ்வாக இருக்கட்டும், பட்டிமன்றப் பேச்சாளர்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள் என்று காட்சி ஊடகமாகவும், நேரடி பேச்சாகவும் மக்களிடையே மனதைக் கையாள்வதைப் பற்றி தொடர்ந்து அரசும், சமூக மக்களும் மனநலன் சார்ந்த, விழிப்புணர்வைத் தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அப்புறம் ஏன், எந்த இடத்தில், மக்கள் மனநலம் சார்ந்த பிரச்சனைகளை எளிதாக கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்றால், இங்கு ஒரு நபரை உன்னிப்பாகக் கவனிக்க நேரம் இல்லாததும், சக மனிதர்கள் மீதான கவனம் குறைந்து, மற்ற கொண்டாட்டமான விஷயங்கள் நம்மை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டே இருக்கிறது என்பதே வலி மிகுந்த நிதர்சனமான உண்மையாகும். அதனால், இன்றைக்கு மக்களுக்கு அவர்களின் வேலை சார்ந்தோ அல்லது பொருளாதாரம் சார்ந்தோ அல்லது கொண்டாட்டங்கள் சார்ந்தோ சிறு தொந்தரவு சக மனிதர்களால் ஏற்படும்போது, ஒருவித எரிச்சலும், கோபமும் ஏற்படுகிறது.

அதனால்தான் இங்கு கோபத்திற்கும், வன்முறைக்கும் வித்தியாசம் தெரியாமலும், அமைதிக்கும், வெறுமைக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கும் சமூகமாக மாறிக் கொண்டிருக்கிறோம். இந்த உணர்வுகளின் உள்ளார்ந்த அர்த்தம் புரியாமல் இருக்கும்போது, மனிதர்கள் போதைக்கும், தனிமை உணர்வுக்கும் ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். இங்கு தனிமைக்கும் (Loneliness) மற்றும் ஏகாந்தம் (Solitude) என்ற உணர்வுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

ஏகாந்தம் என்பது ( தனிமையில் இனிமை காண வேண்டும்) ஒரு தனிநபர் தனியாக ஊர் சுற்றினாலும், தனியாகசாப்பிட்டாலும் அவருக்கு இந்த உலகமே நமக்காக இருக்கிறது என்ற உணர்வுடன் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற ரீதியில் இருப்பார். ஆனால் தனிமை என்ற உணர்வில் ஒரு தனி நபருக்கு, அவரே உறுதுணையாக இல்லாமல், இயலாமை தன்மையுடன் இருப்பார். இன்றைக்கு ஏகாந்தத்தில் இருப்பவரை விட, தனிமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

உளவியல் ரீதியாகப் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். இவர்களிடம் என்ன பிரச்சனை என்று அடிப்படையாகக் கேட்கும்போது, தொடர்ச்சியான ஒரு நட்பு வட்டம் இல்லை என்று சிறு குழந்தைகள் முதல் வளர்ந்த மாணவர்கள் வரை அனைவரும் இந்த நண்பர்களின் நட்பின் தொடர்ச்சி இல்லாததால், பயந்து ஒதுங்குகிறார்கள். அதற்கு மிக முக்கிய காரணமாகப் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

சிறு வயது முதலே குழந்தைகளை பழகுவதற்கு வர்க்க ரீதியாக இருக்கும் நபர்களிடமும், சிறப்பாக படிக்கும் மாணவர்களிடமும், அழகாக மற்றும் நேர்த்தியாகத் தன்னை வைத்துக் கொள்ளும் நபர்களிடத்திலும், ஒழுக்கமாக இருக்கும் நபர்களிடத்திலும் மற்றும் ஜாதி, மதம் ரீதியாக மட்டுமே பழக வேண்டும் என்று பழக்க வழக்கங்களைக் கூறிவிடுகிறார்கள். ஒரு மனிதன் சிறு வயது முதல் பல தவறுகளைச் செய்து, திருத்திக் கொள்ளும் பொருட்டு, இருப்பதால் தான், 18 வயதிற்கு மேற்பட்டவர்களை வளர்ந்தவர்கள் என்றும் அதற்கு முன் வரை வளரிளம் பருவத்தில் இருப்பவர்கள் என்றும் அழைக்கின்றோம். இங்கு பெற்றோர்கள், தன் பிள்ளைகள் படிப்பதில் இருந்து பழகுவது வரை அனைத்திலும் சிறந்தது மட்டுமே இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.

ஆனால் நாம் மெஷின் போன்ற விஷயங்களிடம் உரையாடவில்லை, பழகவில்லை என்பதைத் தொடர்ந்து ஞாபகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். சில மாதங்களுக்கு முன், ஒரு தடவை விமானசேவை சார்ந்த சாப்ட்வேர் பிரச்சனையாகி உலகம் முழுவதும் விமானசேவை ரத்தாகியது. மெஷினுக்கே இந்த நிலை என்றால், மனிதன் காட்டும் முகங்கள் என்பது விதம் விதமாக இருக்கும். உதாரணத்திற்கு, கொரோனா வருவதற்கு முன், ஒருவர் நன்றாகச் செலவு செய்யக்கூடிய நபராக இருந்திருப்பார்.

ஆனால் கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு, சிக்கனமாக செலவு செய்யக்கூடிய நபராக மாறியிருப்பார். ஒரு சிலர் அசைவ உணவை விரும்பி சாப்பிட்டுக் கொண்டே இருப்பவர்கள் திடீரென்று, சைவ உணவு மட்டுமே சாப்பிடுவேன் என்பார். இப்படியாக மனிதர் ஏன் செலவு செய்கிறார், ஏன் தற்போது செலவு செய்யவில்லை என்றும், ஏன் முதலில் அசைவம் சாப்பிட்டார் என்றும், தற்போது ஏன் அசைவம் சாப்பிடவில்லை என்றும் நாம் கேட்க முடியாது. அதற்கு அவர்கள் சொல்லும் காரணங்கள் நம்பத் தகுந்த மாதிரி இருந்தாலும், அவர்களுடைய நடவடிக்கையை அவர்களே உடனே மாற்றும் போது, அவரின் மனநிலை என்ன மாதிரியெல்லாம் தடுமாறி, நிதானம் இழந்து, அதன் பிறகு இந்த மனநிலைக்கு வந்திருக்கும் என்பதே, அவர்களுக்கு பெரிய சவாலாக இருந்திருக்கும்.

இப்படியாக மனிதனை எந்த நேரத்தில், எந்த சூழ்நிலையில், எந்த நோக்கத்தில், எந்த தந்திரத்தில் பேசுகிறார்கள் என்று நாம் என்றுமே கணிக்க முடியாது. அதனால்தான், பலரும் தங்களுக்கு ஏற்பட்ட, நம்பிய உறவுகள், நேசித்த உறவுகள் செய்த துரோகத்தில் இருந்து மீளமுடியவில்லை என்று தொடர்ந்து கூறிக்கொண்டிருப்பதைக் கேட்டு இருப்பீர்கள். ஏன் பல வருடங்கள் பழகியவர்கள், நம்பிய நபர்கள் துரோகம் இழைத்துவிட்டார்கள் என்றால், அதற்கான காரணங்கள் பெரிதாகக் கூட சில நேரங்களில் இருக்காது.

தெரிந்தவர்கள், பழகியவர்கள், நேசித்தவர்கள், நம்பியவர்கள், நெருங்கிய உறவுகள் என்றெல்லாம், அடைமொழியுடன் தான் நாம் இன்றும் அன்பின் மீதான நம்பிக்கையையும், நினைவுகளையும் தூணாக பிடித்துக் கொண்டு பல இக்கட்டான கட்டங்களை நகர்த்திக் கொண்டு வந்திருக்கிறோம். மனிதர்களுக்கு அன்பு என்கிற உணர்வு அடிப்படையாக இருப்பது என்றாலும், அன்பை உடனே எல்லாம் வெளிப்படுத்தத் தெரியாது.

தனக்கான விஷயங்கள் கிடைக்கவில்லை எனும் போது கோபத்தையும், அதன் தாக்கமாக அழுகையையும் தான் அதிகமாக வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள். தான் ஆசைப்பட்ட விஷயங்கள் கிடைக்கவில்லை என்ற அனுபவத்தில், குடும்பத்திலும், சமூகத்திலும் சில குற்றங்களை இயல்பாக செய்து விடுவான். அந்த குற்றங்களினால் கிடைக்கும் தண்டனைக்குப் பின், தான் இந்த உலகத்தில் மனிதன் நினைத்த அனைத்தையும் எந்தக் குற்றம் செய்து கேட்டாலும், அடம்பிடித்தாலும் அவர்களுக்கு கிடைக்காது என்ற புரிதலை வரவைக்கும்.

இந்த புரிதல் அனைத்துமே தவறு செய்து மீண்டவனை சக மனிதன் அணைத்து, அரவணைக்கும் போது தான், மனிதர்கள் அன்பு என்ற இடத்திற்கு நகர ஆரம்பிப்பார்கள். அதுவரை குற்றத்தினால் ஏற்படும் புறக்கணிப்பில் தான், மனிதர்களின் மீதான மதிப்பும் அவனுக்கு புரிய வருகிறது. இப்படியாக ஒரு மனிதன் புறக்கணித்தாலும், ஒரு மனிதன் அரவணைப்பான் என்ற சாராம்சத்தைத் தான், நாம் மிகவும் மதிக்கும் புத்தங்களாகத் திருக்குறள், ராமாயணம், பைபிள், குரான் போன்ற அனைத்தும் மனிதர்களின் கீழ்மையையும், மனிதர்களின் மேன்மையான அம்சங்களையும் எழுதி, வரலாறு வரலாறாக மக்களுக்கு இன்றும் போதிக்கப்பட்டு வருகிறது.

இந்த மொத்தக் கட்டுரைகளின் அடிப்படையே உங்களுக்கான மனிதர்களின் உணர்வுகள் ரீதியான விஷயங்கள் மீது கவனத்தை தொடர்ந்து வைக்குமாறு தான் சொல்கிறேன். ஒரு வீடு என்று இருந்தால், சிறு குழந்தை முதல் வயதானவர்கள் வரை இருப்பார்கள் என்று வைத்திருந்தாலும், அதில் அவரவர் வயதிற்கு ஏற்ப அனுபவமும், பக்குவமும் ஒருசேர இருக்காது. அதனால், ஒவ்வொரு நபரையும், ஒவ்வொரு விதமாகப் பேசிப் புரிந்து, அணுக வேண்டும்.

அதுதான் இன்றைக்கான, மனநலம் சார்ந்த ஆரோக்கியத்தின் அடிப்படை விஷயமாக இருக்கும். எந்தவொரு குற்றத்திலும், கீழ்மையான விஷயங்களில் இருந்து மனிதர்களை மனிதர்கள் மட்டுமே மீட்க முடியும். இதற்காக எந்தவொரு மெஷினும் வராது, வரவும் முடியாது.இதுவே இந்த மனவெளிப் பயணம் தொடரின் மூலம் மனிதர்களின் மனநலன் ஆரோக்கியம் சார்ந்து புரிந்துகொள்ள வேண்டியதாகும். ஒரு வருடத்திற்கும் மேலாக, எழுத வாய்ப்பு தந்த குங்குமம் டாக்டர் இதழுக்கும், வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

The post மனவெளிப் பயணம் appeared first on Dinakaran.

Tags : Saffron ,Gayatri Mahati ,
× RELATED தினமும் கண்ணை கவனி!