லக்னோ: உத்தர பிரதேசத்தில் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தினரை மர்ம நபர்கள் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் ஓஹரவ பவானி பகுதியில் வசித்து வரும் பள்ளி ஆசிரியர் சுனில் குமார்(35), அவரது மனைவி, 5 மற்றும் 2 வயதுடைய இரு மகள்களை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். நேற்று(அக். 4) மாலை இந்த நடந்த இந்த கொடூர சம்பவத்தில் சந்தன் வர்மா என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, சுனில் குமாரின் மனைவி ரேபரேலி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், சந்தன் வர்மா மீது எஸ்சி/எஸ்டி சட்டத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள், சுனில் குமாரின் வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விரைந்து விசாரணை நடத்துமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
அமேதி காங்கிரஸ் எம்.பி. கிஷோரி லால் ஷர்மா இன்று சுனில் குமாரின் தந்தையை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின்பேரில், சுனில் குமாரின் தந்தையை பேசச் செய்தார். முன்னதாக செய்தியாளர்களுடன் பேசிய கிஷோரி லால் ஷர்மா ‘இது ஒரு கொடூரமான கொலை. மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் தொடர்புகொண்டு அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்குமாறு ராகுல் காந்தி என்னிடம் கேட்டுக் கொண்டார். அவரது அறிவுறுத்தலின் பேரில், நான் நேற்று முதல் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறேன்’ என்றார்.
The post அமேதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரக் கொலை செய்த மர்ம நபர்கள்: குடும்பத்தினருக்கு தொலைபேசியில் ராகுல் காந்தி ஆறுதல் appeared first on Dinakaran.