×
Saravana Stores

ராமேஸ்வரம் கோயிலுக்கு சொந்தமான புனித தீர்த்தக்குளங்கள் பாதுகாக்கப்படுமா?.. பக்தர்கள் எதிர்பார்ப்பு


மண்டபம்: மண்டபம் பகுதியில் அமைந்துள்ள ராமேஸ்வரம் கோயிலுக்கு சொந்தமான புனித தீர்த்தக்குளங்களை முறையாக பராமரிக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமேஸ்வரத்தில் தமிழக இந்து அறநிலையத் துறையின் நிர்வாகத்தின் கீழ் ராமநாதசுவாமி கோயில் இயங்கி வருகிறது. இந்த கோயிலுக்கு சொந்தமாக 22 புனித தீர்த்தம் உள்பட ராமநாதபுரம் மாவட்டம் பகுதி முழுவதும் 108 புனித தீர்த்தக்கிணறுகள் மற்றும் குளங்கள் உள்ளது. பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள இந்த தீர்த்த குளங்கள் மற்றும் கிணறுகள் தனியார் ஆக்கிரமிப்பில் ஆக்கிரமித்து மணல்மேவி மூடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் 50க்கும் மேற்பட்ட தீர்த்த கிணறுகள் குளங்களை ராமேஸ்வரம் பசுமை ராமேஸ்வரம் திட்டத்தின் கீழ் விவேகானந்தா கேந்திரம் சார்பில் கண்டுபிடிக்கப்பட்டு சீரமைக்கப்பட்டு வருகிறது. மன்னர்கள் ஆட்சி செய்த வந்த காலத்தில் ராமநாதசாமி கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து நடைபயணமாக வந்த சாமியார்கள் தங்கி செல்லும் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தீர்த்த கிணறுகள் மற்றும் குளங்கள் அமைத்தனர். இதில் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தத்தை தவிர ராமேஸ்வரம் கோயிலை சுற்றியும், ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்பட ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 86 தீர்த்தங்களையும் கண்டுகொள்வதில்லை. இதனால் இந்த தீர்த்த கிணறுகள் பல ஆக்கிரமிப்பிலும், குப்பைகள் நிறைந்து புனித திர்த்தங்கள் அழிந்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மண்டபம் காந்திநகர் பகுதியில் களஞ்சியம் முனியசாமி கோவிலுக்கு எதிர்ப்புறம் தேசிய நெடுஞ்சாலை அருகே பாவ விமோசன தீர்த்தம் உள்ளது. இந்த தீர்த்தத்தில் மனிதர்களாக பிறந்த யாரும் பாவங்கள் செய்து இந்த தீர்த்தத்தில் புனித நீராடினால் பாவங்கள் கழிந்து விமர்சனம் கிடைக்கும் என்பது இந்த தீர்த்தத்தின் வரலாறு ஆகும். அப்படிப்பட்ட இந்த தீர்த்தத்தை கோயில் நிர்வாகம் கண்டுகொள்ளாமல் விட்டது. இதை பசுமை ராமேஸ்வரம் திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் பல ஆண்டுகளாகியும் இந்த தீர்த்தம் தற்போது குப்பைகள் கலந்து தண்ணீர் பாசி அடைந்து துர்நாற்றம் வீசுகிறது. இந்த தீர்த்தத்தை உடனடியாக தூய்மை செய்து பக்தர்கள் பயன்பாட்டுக் கொண்டு வருவதற்கு கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தகவல் பலகை அவசியம்
ராமேஸ்வரம் பகுதியிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலை தூரத்தில் பாம்பன் சாலைப்பாலம் கடந்து ராமநாதபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் அருகாமையில் மண்டபம் காந்திநகர் பகுதியில் பாவ விமோசன தீர்த்ததம் அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தின் வரலாறு குறித்து அந்தப் பகுதியில் தகவல் பலகை அமைக்க வேண்டும். அதுபோல், ராமேஸ்வரம் ராமநாதசாமி ேகாயிலுக்கு சொந்தமான 86 புனித தீர்த்தத்திலும் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து எடுக்கப்பட்ட தீர்த்தத்தை கோயில் நிர்வாகம் முறையாக பராமரித்தும், தீர்த்தத்தின் வரலாறு குறித்து தகவல் பலகைகள் அமைக்க வேண்டும். இந்த தீர்த்தம் அமைந்துள்ள பகுதிகளுக்கு பக்தர்கள் சென்று வருவதற்கு பக்தர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post ராமேஸ்வரம் கோயிலுக்கு சொந்தமான புனித தீர்த்தக்குளங்கள் பாதுகாக்கப்படுமா?.. பக்தர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Rameswaram temple ,Mandapam ,Ramanathaswamy temple ,Rameswaram ,Tamil Nadu Hindu Charitable Department ,
× RELATED ராமேஸ்வரம் கோயிலில் உண்டியல் வசூல் ₹1.65 கோடி