×
Saravana Stores

வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் வெள்ள மீட்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஒத்திகை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி சார்பில், செங்கல்பட்டு கொளவாய் ஏரியில் புலிப்பாக்கம் பகுதி மக்களுக்கு பேரிடர் மீட்பு குறித்து ஒத்திகை நிகழ்ச்சிகளை தீயணைப்புத்துறையினர் நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், பேரிடர் காலங்களில் பொதுமக்கள் செய்ய வேண்டியவை, தங்களை தற்காத்து கொள்ளும் நிகழ்வு, பேரிடர் பணிகளில் எவ்வாறு பொதுமக்களை பாதுகாப்பாக அழைத்து செல்வது குறித்த ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. மேலும், இந்த ஒத்திகை நிகழ்ச்சியானது செங்கல்பட்டு மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் அலுவலர் ராஜேஷ் கண்ணாவின் அறிவுறுத்தலின்படி சிறப்பு நிலை அலுவலர் தங்கதுரை தலைமையில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள், புலிப்பாக்கம் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே, தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
வடகிழக்கு பருவ மழையை எதிர் கொள்ளும் வகையில், மாமல்லபுரம் அருகே உள்ள பட்டிப்புலம் கிராமத்தில் உள்ள குளத்தில் தீயணைப்பு துறையினர் முன்னெச்சரிக்கை வெள்ள தடுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். வடகிழக்கு பருவமழை நெருங்கி வரும் நிலையில் மக்களுக்கு மழைவெள்ள காலங்களில் ஏற்படும் பேரிடரில் இருந்து தற்காத்துக் கொள்ள ஏதுவாக அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் பேரிடர் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டுமென தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை செங்கல்பட்டு மாவட்ட அலுவலர் ராஜேஷ் கண்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, மாமல்லபுரம் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில், வடகிழக்கு பருவமழை மற்றும் வெள்ளம் மீட்பு பணிகள் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி, முதன்மை தீயணைப்பாளர்கள் வெங்கட கிருஷ்ணன், ரமேஷ் பாபு ஆகியோர் முன்னிலையில், மாமல்லபுரம் அடுத்த பட்டிப்புலம் கிராமத்தில் உள்ள குளத்தில் நேற்று நடந்தது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், மாமல்லபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் 10க்கும் மேற்பட்டோர் மழை வெள்ள காலங்களில் நீர்நிலைகளில் சிக்கிக் கொண்டவர்களை படகு மூலம் எப்படி மீட்பது, வெள்ளப்பெருக்கு அதிகம் ஏற்படும்போது கிடைக்கின்ற பொருட்களான மரக்கட்டைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், தகரப் பெட்டிகள், சிலிண்டர்கள், காலி குடங்கள் ஆகியவற்றை கொண்டு வெள்ள நீரில் எவ்வாறு தப்பித்து கரை ஏறுவது, புயல் காரணமாக சாலைகளில் விழுந்து கிடக்கும் மரங்களை எவ்வாறு அகற்றுவது, மீட்பு பணி பொருட்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் போன்ற ஒத்திகை நிகழ்ச்சிகளை பொதுமக்களுக்கு தத்ரூபமாக செய்து காட்டி, பயிற்சி அளித்தனர்.

இதனை தொடர்ந்து, அவசர மற்றும் மீட்பு பணிக்கு தகவல் தெரிவிக்க அனைவரும் 112 மற்றும் 101 ஆகிய எண்களை செல்போனில் பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். எங்கள், உயிரை விட பொதுமக்களாகிய உங்களது உயிர்களை காப்பாற்ற நாங்கள் தயார் நிலையில் உள்ளோம். அதனால், நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தீயணைப்பு வீரர்கள் அறுவுறுத்தினர்.

இதில், கேளம்பாக்கம் வருவாய் ஆய்வாளர் மணிகண்டன், பட்டிப்புலம் விஏஓ கலைச்செல்வி, பட்டிப்புலம் திமுக ஊராட்சி தலைவர் வரலட்சுமி லட்சுமிகாந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்று தீயணைப்பு வீரர்களின் பணிகளை பாராட்டினர்.

வெள்ளோட்டம்
திருப்போரூர்: சிறுசேரி மற்றும் திருப்போரூர் தீயணைப்பு நிலையங்களின் சார்பில், தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று 2 இடங்களில் நடத்தப்பட்டது. இதில் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் வேண்டவராசி அம்மன் கோயில் குளம் மற்றும் திருப்போரூர் கந்தசுவாமி கோயில் குளம் ஆகியவற்றில் நீரில் சிக்கியவர்களை மீட்பது குறித்து செயல் விளக்க காட்சி செயல்முறை நடத்தி காட்டப்பட்டது.

திருப்போரூர் கந்தசுவாமி கோயில் குளத்தில் நீரில் விழுந்த பக்தர்களை கயிறு கட்டி மீட்பது, நீரில் மூழ்கி காப்பாற்றுவது உள்ளிட்ட செயல் விளக்க காட்சிகள் கோயில் ஊழியர்களைக்கொண்டு நடத்தப்பட்டது. இதையடுத்து, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. திருப்போரூர் தீயணைப்பு அலுவலர் ஆனந்தன் தலைமையில், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் இந்த சிறப்பு முகாமில் கலந்துகொண்டனர்.

பாதுகாப்பு நிகழ்ச்சி
திருக்கழுக்குன்றம்: வடகிழக்கு பருவமழை மற்றும் வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மீட்பு பணிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி திருக்கழுக்குன்றம் தீயணைப்பு துறை சார்பில் நேற்று நடந்தது. இதில், நிலைய (பொறுப்பு) அலுவலர் சுதாகர் தலைமை தாங்கினார். திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் விநாயகம், மண்டல துணை தாசில்தார் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக திருக்கழுக்குன்றம் பேரூராட்சி மன்ற தலைவர் ஜி.டி.யுவராஜ் கலந்துகொண்டு, வடகிழக்கு பருவமழை மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ஒத்திகையின்போது இயற்கை சீற்றங்களினால் மரங்கள் முறிந்து விழுந்தால், அவற்றை இயந்திரங்களால் எவ்வாறு அகற்றுவது, மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் நுழைந்தால், அவற்றை எவ்வாறு பிடித்து அகற்றுவது, மழை வெள்ளத்தில் பொதுமக்கள் சிக்கி கொண்டால் அவர்களை எவ்வாறு மீட்டு காப்பாற்றுவது என்று சங்கு தீர்த்த குளத்தில் ஒத்திகை நடத்தப்பட்டது.

அப்போது, ஒருவர் மழை வெள்ளத்தில் சிக்கி தவிப்பது போன்றும், அவரை எவ்வாறு மீட்கின்றனர் என்றும் ஒத்திகை நடத்தப்பட்டது.

The post வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் வெள்ள மீட்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஒத்திகை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Chengalpattu Fire and Rescue Mission ,Pulipakkam ,Kolavai Lake ,
× RELATED செங்கல்பட்டில் சாலை பாதுகாப்பு...