- அமைச்சர்
- இராமச்சந்திரன்
- சென்னை
- வருவாய் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்
- தேசிய
- ஆவணங்கள் நவீனப்படுத்த
- டில்ர்ம்ப்
- சென்னை அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்கள், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் இயங்கி வரும் நிலஅளவை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தேசிய நில ஆவணங்கள் நவீன மயமாக்கல் (DILRMP) திட்டத்தின் கீழ் இன்று (03.10.2024) அமைக்கப்பட்ட நவீன பயிற்சி கூடம் மற்றும் ஆய்வுக்கூடத்தினை திறந்து வைத்தார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் இயங்கி வரும் நில அளவை மற்றும் நிலவரித்திட்ட துறையில், பணிபுரிந்து வரும் புலப்பணியாளர்கள் (3293), தொழில்நுட்ப பணியாளர்கள் (1076), நிர்வாக பணியாளர்கள் (461) என மொத்தம் 4830 பணியாளர்களும் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள், இளநிலை உதவியாளர்கள் ஆகியோருக்கு நில அளவை பயிற்சி வழங்கும் வகையில் தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் நிலஅளவை பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாட்டில் அமைந்துள்ள நில அளவை பயிற்சி நிலையத்தில் 180 நபர்களுக்கு பயிற்சி வழங்க கூடிய அளவிற்கான பயிற்சி கூடம் மற்றும் தங்குமிடத்துடன் கூடிய அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு நில அளவை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மற்றொன்று, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நில அளவைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையமாகும். இப்பயிற்சி நிலையத்தில் 50 நபர்களுக்கு பயிற்சி வழங்க கூடிய அளவிற்கான பயிற்சி கூடத்துடன் கூடிய அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு நில அளவை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்துடன் தமிழ்நாடு அரசு செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (Memorandum of Understanding) மூலம் ‘நில அளவைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்’ சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் 2005 ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது. ‘வருவாய் நிருவாகத்தினை வலுப்படுத்துதல் மற்றும் நில ஆவணங்களை மேம்படுத்துதல் (Strengthening of Revenue Administration and Updation of Land Records – SRA&ULR)’ எனும் திட்டத்தின் கீழ், மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஒப்பளிக்கப்பட்ட தொகையான ரூ.250 இலட்சம் நிதியைக் கொண்டு இப்பயிற்சி மையம் நிறுவப்பட்டு, 2005 ஆம் ஆண்டு முதல் இங்கு அரசுப்பணியாளர்களுக்கு நில அளவைப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பூகோள நிலைக்கலன் கருவி (DGPS) மற்றும் மின்னணு நில அளவைக் கருவி (ETS) போன்ற நவீன நில அளவைக் கருவிகளைக்கொண்டு நில அளவை மேற்கொள்வது மற்றும் ‘கொலாப்லேண்ட்’ மற்றும் இதர வரைபட மென்பொருட்களைக்கொண்டு புலப்படங்களை வரைதல் போன்ற பயிற்சிகள் இம்மையத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. 2005 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் 4,859 அரசுப் பணியாளர்களுக்கு இம்மையத்தில் நில அளவைப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நில அளவை செய்வதற்கான உரிமம் வழங்குவதற்குரிய பயிற்சியும் இப்பயிற்சி மையத்தில் 2021 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
தேசிய நில ஆவணங்களை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் (Digital India Land Records Modernization Programme – DILRMP) ரூ.147.24 இலட்சம் நிதி 2023 ஆம் ஆண்டில் இப்பயிற்சி மையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பளிக்கப்பட்டுள்ளது. இந்நிதியைப் பயன்படுத்தி இப்பயிற்சிமையத்தில் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இப்பயிற்சிமையத்தில் சுமார் 50 நபர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கேற்ப அமைக்கப்பட்டிருந்த வகுப்பறை மற்றும் இதர உட்கட்டமைப்புகளை தற்போது, மேலும் 50 நபர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் ரூ.90.00 இலட்சம் செலவில் நவீன நிலஅளவை உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, ரூ.45.00 இலட்சம் செலவில் 3600 சதுர அடி பரப்பில் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு, பயிற்சி வகுப்பறை, சிறிய கூட்ட அரங்கம், ஆய்வுக்கூடம் ஆகியவை புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வின்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அரசு முதன்மைச் செயலர் திருமதி. பெ.அமுதா, இ.ஆ.ப., நில அளவை மற்றும் நிலவரித்திட்டத் துறை இயக்குநர் ப.மதுசூதன் ரெட்டி, இ.ஆ.ப., அண்ணா பல்கலைகழக பதிவாளர் முனைவர் ஜெ.பிரகாஷ், நில அளவைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநர் முனைவர் ஆர். வித்யா மற்றும் மு.வெங்கடேசன் இணை இயக்குநர், மத்திய நிலஅளவை அலுவலகம் (DILRMP) போன்ற உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post நவீன பயிற்சி கூடம் மற்றும் ஆய்வுக்கூடத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்! appeared first on Dinakaran.