×

பெண் மருத்துவர் பலாத்கார கொலை விவகாரம் மே.வங்கத்தில் மருத்துவர்கள் மீண்டும் போராட்டம்: மருத்துவ சேவைகள் பாதிப்பு

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார, கொலை வழக்கில் நீதி கேட்டு இளநிலை மருத்துவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளதால் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவராக இருந்த பெண் கடந்த மாதம் 9ம் தேதி பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது. மேலும் இந்த வழக்கை உச்ச நீதிமன்றமும் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே பெண் மருத்துவரின் மரணத்துக்கு நீதி கேட்டு இளநிலை மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் மம்தா பானர்ஜி எடுத்த நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுடன் மாநில அரசு செய்து கொண்ட உடன்பாட்டையடுத்து கடந்த செப்டம்பர் 21ம் தேதி இளநிலை மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். அத்தியாவசிய மற்றும் அவசர சிகிச்சைகளை மட்டும் செய்து வந்த அவர்கள், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் பணியாற்றவில்லை.

இந்நிலையில் இளநிலை மருத்துவர்கள் மீண்டும் காலவரையற்ற முழு வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் மருத்துவ சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் கூறியதாவது, “பெண் மருத்துவர் பாலியல் பலாத்கார, கொலை விவகாரத்தில் குற்றவாளிகளை வழக்கில் இருந்து தப்பிக்க வைக்கும் நோக்கத்துடன் சிபிஐ விசாரணை மெதுவாக இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது ” என்று தெரிவித்துள்ளர். இளநிலை மருத்துவர்கள் நேற்று பேரணி நடத்தினர்.

The post பெண் மருத்துவர் பலாத்கார கொலை விவகாரம் மே.வங்கத்தில் மருத்துவர்கள் மீண்டும் போராட்டம்: மருத்துவ சேவைகள் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Kolkata ,RG Garh Government Hospital and ,Medical College ,West Bengal, Kolkata ,
× RELATED மேற்கு வங்கத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் பலி!!