×
Saravana Stores

இறுதிகட்டத்தில் 65% வாக்குப்பதிவு; காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்தது: வரும் 8ம் தேதி ஓட்டு எண்ணிக்கை

நகர்: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்தது. 3வது மற்றும் இறுதிகட்ட தேர்தலில் 65.48 சதவீத வாக்குகள் பதிவாகின. வரும் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீரில் 90 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் 3 கட்டமாக நடத்தப்பட்டது. 10 ஆண்டுக்குப் பிறகு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுவதாலும், சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு நடக்கும் முதல் சட்டப்பேரவை தேர்தல் என்பதாலும் இத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. தேர்தலையொட்டி, 400 கம்பெனி பாதுகாப்பு படையினர் மற்றும் துணை ராணுவம், போலீசார் குவிக்கப்பட்டனர். கடந்த 18ம் தேதி நடந்த முதல் கட்ட தேர்தலில் 61.38 சதவீத வாக்குகளும், 25ம் தேதி நடந்த 2ம் கட்ட தேர்தலில் 57.31 சதவீத வாக்குகளும் பதிவாகின.

இதைத் தொடர்ந்து 3வது மற்றும் கடைசி கட்டமாக 7 மாவட்டங்களில் 40 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். மாலை 5 மணி நிலவரப்படி 65.48 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்காளர்கள் மாலை 6 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக உதம்பூர் மாவட்டத்தில் 72.91 சதவீத வாக்குகள் பதிவாகின. இத்துடன் காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. வரும் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். இத்தேர்தலில், காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அமைத்தும், பாஜ தனித்து போட்டியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

The post இறுதிகட்டத்தில் 65% வாக்குப்பதிவு; காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்தது: வரும் 8ம் தேதி ஓட்டு எண்ணிக்கை appeared first on Dinakaran.

Tags : Kashmir Assembly Elections ,Nagar ,Jammu ,and Kashmir Legislative Assembly Elections ,Jammu and ,Kashmir ,Dinakaran ,
× RELATED சென்னையில் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை!