புதுடெல்லி, அக். 2: ஜமைக்காவின் வளர்ச்சிப் பயணத்தில் இந்தியா நம்பகமான கூட்டாளியாக இருப்பதாக ஜமைக்கா பிரதமர் ஆன்ட்ரூ ஹோல்னசிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜமைக்கா பிரதமர் ஆன்ட்ரூ ஹோல்னஸ் 4 நாள் அரசுமுறைப் பயணமாக நேற்று டெல்லி வந்தார். ஜமைக்கா பிரதமர் ஒருவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் அரசுமுறைப் பயணம் இது. மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அவர், டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவை பலப்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் பேசினர்.
பின்னர் பிரதமர் மோடி விடுத்த அறிக்கையில், ‘‘ஜமைக்கா பிரதமர் ஹோல்னசுடன் பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து விவாதித்தேன். அனைத்து பிரச்னைகளும், மோதல்களும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். உலக அமைதி, பாதுகாப்பை உறுதி செய்வதில் எங்கள் இரு தரப்பும் தொடர்ந்து இணைந்து செயல்படும். ஐநா பாதுகாப்பு கவுன்சில் உட்பட அனைத்து உலக நிறுவனங்களிலும் சீர்திருத்தம் அவசியம் என்பதில் இந்தியாவும் ஜமைக்காவும் ஒருமனதாக உள்ளன.
ஜமைக்காவின் வளர்ச்சிப் பயணத்தில் இந்தியா நம்பகமான, உறுதியான கூட்டாளியாக இருந்து வருகிறது. அது எதிர்காலத்திலும் தொடரும். மேலும், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, உயிரி எரிபொருள், புத்தாக்கம், சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் இந்தியா தனது அனுபவத்தை ஜமைக்காவுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது’’ என கூறி உள்ளார்.
The post ஜமைக்கா பிரதமருடன் மோடி சந்திப்பு: இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை appeared first on Dinakaran.