- ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம்
- தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர்
- சென்னை
- தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில்
- ஜனாதிபதி
- பங்கஜ் அரோரா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தமிழ்நாடு திறந்த பல்கலைக்கழகம்
- சைதாப்பேட்டை
- ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம்
- தின மலர்
சென்னை: ஆசிரியர் கல்வியில் யோகா, கலை, சமஸ்கிருதம், உடற்கல்வி பாடங்கள் புதிதாக சேர்க்கப்படும் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர் பங்கஜ் அரோரா கூறினார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் 11வது பட்டமளிப்புவிழா சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) தலைவர் பங்கஜ் அரோரா பட்டமளிப்புவிழா உரையாற்றியபோது கூறியதாவது:
மாறிவரும் கல்விச்சூழலுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தேசிய கல்விக்கொள்கை 2020 வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் கல்வியில் புதுமையை புகுத்தும் நோக்கில் ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இத்திட்டத்தில், யோகா கல்வி, கலை கல்வி, சமஸ்கிருத கல்வி, உடற்கல்வி உள்ளிட்டவை இடம்பெறும். மூத்த ஆசிரியர்கள் புதிய ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் வகையில் ஆசிரியர் கல்வியில் தேசிய வழிகாட்டுதல் பயிற்சி திட்டமும், ஆசிரியர்களின் பணித்திறனை தொடர்ந்து மேம்படுத்தும் வகையில் தேசிய ஆசிரியர் திறன் மேம்பாட்டுத்திட்டமும் செயல்படுத்தப்படும்.
கல்விமுறையின் முதுகெலும்பாக திகழ்பவர்கள் ஆசிரியர்கள். எனவே ஆசிரியர்களின் கற்பித்தலின் தரத்தை மேம்படுத்த வேண்டியது அவசியம். வரும் காலத்தில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களின் தேவை இருமடங்காக உயரும். ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார்.
இணைவேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியன் முன்னிலை வகித்தார். பிஎட், எம்எட் படிப்புகளில் பல்கலைக்கழக அளவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதக்கங்களையும் பட்டங்களையும் வழங்கினார். மேலும், ஆராய்ச்சி பட்டம் பெற்ற 66 பேர் ஆளுநரிடம் பட்டச்சான்றிதழை பெற்றுக் கொண்டனர். விழா மூலம் 48,510 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளரும், உயர்கல்வித்துறை செயலருமான பிரதீப் யாதவ் வரவேற்றார். பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) ராஜசேகரன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கணேசன், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கடந்த ஒன்றரை ஆண்டாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளதால் உயர் கல்வித்துறை கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ் கையொப்பமிட்டு பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
The post ஆசிரியர் கல்வியியல் பல்கலை. பட்டமளிப்பு விழா ஆசிரியர் கல்வியில் யோகா, கலை உடற்கல்வி பாடங்கள் சேர்க்கப்படும்: தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தலைவர் தகவல் appeared first on Dinakaran.