×
Saravana Stores

யாருமே வெல்ல முடியாதவர் அல்ல ஆணவத்தை மட்டும் மக்களால் சகித்துக்கொள்ள முடியாது: மக்களவை தேர்தல் முடிவு குறித்து வாய்திறந்தார் பிரசாந்த் கிஷோர்

பாட்னா: யாருமே வெல்ல முடியாதவர் இல்லை என்றாலும், ஆணவத்தை மட்டும் மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார். மக்களவை தேர்தல் முடிவு குறித்து முதல்முறையாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நேற்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: மக்களவைத் தேர்தல் முடிவுகள் இந்த நாட்டில் எந்தத் தலைவரும் மக்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதை நமக்குத் தெரிவிக்கின்றன.

மக்களால் எதையும் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் ஆணவத்தை அல்ல. ஆணவத்தையும் , அதீத நம்பிக்கையையும் மக்கள் எங்கெல்லாம் பார்த்தார்களோ அங்கெல்லாம் யார் அவர்களுக்கு தலைவன் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். இந்த தீர்ப்பு யாரும் வெல்ல முடியாதவர் அல்ல என்பதையும் தெரிவித்து இருக்கிறது. மோடியின் பெயரை சொன்னால் வாக்குகள் கிடைக்கும் என்று பாஜ நினைத்தது. ஆனால் வாக்காளர்கள் எல்லாவற்றையும் மாற்றி விட்டனர்.

இந்தியாவில் எந்தக் கட்சியும் அல்லது தலைவரும் மிகப் பெரியவர்களாக மாற முடியாது. அவர்கள் நாட்டின் மீது ஒருதலைப்பட்சமான ஆதிக்கம் செலுத்த முடியாது. இந்திரா காந்தியின் கீழ் காணப்பட்டதைப் போல மோடியின் கீழ் ஒரு சர்வாதிகாரம் உருவாகும் என்று பேசினார்கள். ஆனால் மக்கள் மோடியை நிராகரித்துவிட்டார்கள். இப்போது மோடிக்கு எல்லாம் அதிகாரம் இல்லை. ஆனால் இப்போது பா.ஜ பெற்ற இடங்கள் அவருக்காக மட்டுமே கிடைத்தன. இவ்வாறு அவர் கூறினார்.

* ராகுல்காந்தியை மக்கள் ஏற்றுக்கொண்டார்களா?
பிரசாந்த் கிஷோர் கூறுகையில், ‘‘காங்கிரஸ் கட்சியை வழிநடத்தும் ராகுல் காந்தியின் திறன் குறித்த கேள்வியை மக்களவை தேர்தல் முடிவுகள் நீக்கிவிட்டது. ஆனால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக நிரூபிக்கவும், நாடு அவரைத் தலைவராக ஏற்கவும் இன்னும் சிறிது தூரம் ராகுல்காந்தி செல்ல வேண்டும். ராகுல்காந்தியின் ஆதரவாளர்கள் இப்போது காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமரவைக்க அவரால் மட்டுமே முடியும் என்று நம்புகிறார்கள்.

அவரை ஒரு தலைவராக நாடு ஏற்றுக்கொண்டதா? நான் அப்படி நினைக்கவில்லை. ஆனால் தேர்தலுக்கு முன்னதாக ராகுல் காந்தி கடினமாக உழைத்தார். அவரது தலைமைப் பண்பு குறித்து காங்கிரஸ் உறுப்பினர்களிடையே இருந்த சந்தேகங்களை நீக்கி, அவர் தனது கட்சிக்கு உதவியுள்ளார். காங்கிரஸ் கட்சியை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய தலைவர் அவர்தான் என்று கட்சியினர் இப்போது நம்புகிறார்கள். ராகுல்காந்தியால் தான் இந்த முறை காங்கிரஸ் சிறப்பாக செயல்பட்டது.

ராகுல் காந்தி இப்போது எதிர்க்கட்சிகளை மேலும் வலுப்படுத்தவும், தனது கட்சியின் மறுமலர்ச்சிக்காகவும் செயல்பட வேண்டும். அப்போதுதான் ஆட்சி அமைக்க முடியும். ஏனெனில் இப்போது கூட காங்கிரஸ் 99 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. அதே சமயம் இந்திரா ஆட்சியில் காங்கிரஸ் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த போதும் 154 இடங்களை பிடித்தது. இந்தியர்கள் இந்திரா காந்தியை தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர். எனவே நாடு அவரைத் தலைவராக ஏற்றுக்கொள்வதற்கு அவர் இன்னும் சிறிது தூரம் பயணிக்க வேண்டும்’ என்றார்.

The post யாருமே வெல்ல முடியாதவர் அல்ல ஆணவத்தை மட்டும் மக்களால் சகித்துக்கொள்ள முடியாது: மக்களவை தேர்தல் முடிவு குறித்து வாய்திறந்தார் பிரசாந்த் கிஷோர் appeared first on Dinakaran.

Tags : Prashant Kishore ,Lok ,Sabha ,PATNA ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED பீகார் இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு...