×

உத்தமபாளையம் பேரூராட்சி நகராட்சியாகிறது: ஜனவரியில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

உத்தமபாளையம்: உத்தமபாளையம் பேரூராட்சி நகராட்சியாக மாறுகிறது. இதற்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேனி மாவட்டத்தில் வளர்ந்துவரும் பேரூராட்சிகளில் ஒன்றாக உத்தமபாளையம் உள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள 22 டவுன் பஞ்சாயத்துகளில் நகராட்சி அந்தஸ்தை அடையக்கூடிய மக்கள் தொகையை, உத்தமபாளையம் பேரூராட்சி கொண்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அப்போதே 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கு வசித்தனர். தற்போதைய இதன் எண்ணிக்கை அதிகரிக்த்துள்ளது. உத்தமபாளையம் ஆங்கிலேயர் காலம் தொட்டு பல்வேறு சிறப்புகளை உடையதாக உள்ளது. காரணம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே இங்கு அதிகமான மக்கள் வாழ்ந்துள்ளனர். இதே போல் உயர்கல்வி பயிலக்கூடிய கல்வி நிலையங்கள் நூற்றாண்டுகளுக்கு முன்பே இங்கு உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இங்குள்ள உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 1924ம் ஆண்டு கட்டப்பட்டது. இதே போல் உத்தமபாளையம் அரசு மருத்துவமனை 1922ம் வருடமே தொடங்கப்பட்டு பிரிட்டிஸார் ஆட்சி காலத்திலேயே, தேனி மாவட்டத்தின் பெரிய அரசு மருத்துவமனைகளில் இரண்டாவது இடத்தை பெற்ற சிறப்புகளை உடையது. இதே போல் உத்தமபாளையம் சட்டமன்றத் தொகுதியாகவும் இருந்துள்ளது. இது 1960ம் வருடத்திற்கு பின்பு கம்பம் சட்டமன்ற தொகுதியாக பெயர் மாற்றப்பட்டுள்ளது. 1963ம் ஆண்டு பேரூராட்சி அந்தஸ்தை பெற்று 61 வருடங்களாக பேரூராட்சியாகவே தொடர்ந்து நீடித்து வருகிறது. உயர்கல்வி நிறுவனமான ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரி, ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் பழமையான கல்லூரியாக உள்ளது. இதே போல் அதிகமான விவசாய நிலங்கள் கொண்ட மாவட்டமாகவும்,

மும்மதத்தினரின் வழிபாட்டுதலமாக உள்ள திருக்காளாத்தீஸ்வரர் -ஞானம்மன் கோயில், உத்தமபாளையம் நைனார் முகமது பெரிய பள்ளிவாசல், ஆர்.சி, சி.எஸ்.ஐ. தேவாலயங்கள், ஆங்கிலேயர் காலத்தில் தொன்று தொட்டு வரும் காளாத்தீஸ்வரர் தேரோட்டம், கிறிஸ்தவர்களின் சப்பர பவனி பிரசித்தி பெற்றதாக உள்ளது. இதேபோல் பல்வேறு கோயில்களின் திருவிழாக்களும், கடந்த 50 வருடத்திற்கு முன்பு மும்மதத்தினர் பங்கேற்ற ரசூல் சாகிப் தர்கா பூக்குழி விழா, இன்றளவும் ஊரின் பெருமைகளில் ஒன்றாக பேசப்படுகிறது. உத்தமபாளையத்தை நகராட்சியாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தீவிரமடைந்து வருகிறது. காரணம் இங்கு அடிப்படை வசதிகளுக்கு அதிகமான அளவில் நிதி ஆதாரங்கள் பெற வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விரிவாக்கப் பகுதிகளாக உள்ள பி.டி.ஆர்.காலனி இந்திரா நகர், மின்வாரிய குடியிருப்பு காலனி, தாமஸ் நகர் பகுதிகள் போன்றவைகளில் இன்னும் அதிகமான அளவில் அடிப்படை வசதிகளான குடிநீர், சாக்கடை, தெரு விளக்கு வசதிகள் ஏற்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை உள்ளது.

எனவே அதிகமான நிதி ஆதாரங்கள் உத்தமபாளையத்திற்கு தேவைப்படுகிறது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, உள்கட்டமைப்பு வசதிகளை அதிகமாக செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தாலுகா தலை நகரமாக உள்ளதால் தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை, சார்நிலைக் கருவூலம், அலுவலகம் உள்ளிட்டவை இங்கு செயல்பட்டு வருகிறது. இதேபோல் பெகுகி வரும் மக்கள் தொகை பெருக்கம், நில மதிப்பீட்டின் உயர்வு, போன்றவை உத்தமபாளையம், பேரூராட்சியில் இருந்து நகராட்சி அந்தஸ்தாக உயர்த்துவதற்கான பல்வேறு தகுதிகளாக பார்க்கப்படுகின்றன. உத்தமபாளையம் தற்போது தமிழக அரசின் பட்டியலில் நகராட்சி என சேர்ந்துள்ளது. தேனி மாவட்டத்தில் புதிதாக உருவாகப்போகும் நகராட்சியில் உத்தமபாளையமும் இணைந்துள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த ஜனவரியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post உத்தமபாளையம் பேரூராட்சி நகராட்சியாகிறது: ஜனவரியில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Uttamapalayam ,Utthampalayam ,Theni district ,Uttampalayam ,
× RELATED கட்டிட தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி