×

ஐ.நா. தொடங்கி, உலக நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்

டெல் அவிவ்: லெபனான் மீதான தாக்குதலை நிறுத்தவும், மத்திய கிழக்கில் பதற்றத்தை தவிர்க்கவும் என்று ஐ.நா. தொடங்கி சர்வதேச அமைப்புகளும், உலக நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் கூட நேற்று இரவு லெபனான் மீது இஸ்ரேல் தரைவழித் தாக்குதலைத் தொடங்கிவிட்டது. லெபனானின் சில குறிப்பிட்டப் பகுதிகளைக் குறிவைத்து தரைவழித் தாக்குதலைத் தொடங்கிவிட்டதை இஸ்ரேல் ராணுவம் உறுதியும் செய்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் நீண்ட விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “இஸ்ரேல் அரசியல் குழுவின் முடிவுக்கு இணங்க, தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத இலக்குகள் குறித்த உளவுத்துறை அளித்த நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில் துல்லியமான இலக்குகளைக் குறிவைத்து, வரையறுக்கப்பட்ட் பகுதியில், தரைவழித் தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் தொடங்கியுள்ளது. இந்த இலக்குகள் இஸ்ரேலின் எல்லைக்கு அருகில் உள்ள கிராமங்களில் அமைந்துள்ளன. இவை வடக்கு இஸ்ரேலில் உள்ள இஸ்ரேலிய மக்களுக்கு நீண்டகால அச்சுறுத்தலாக உள்ளன.

இந்தத் தரைவழித் தாக்குதலில் அண்மையில் ராணுவப் பயிற்சி அளித்து தயார்படுத்தப்பட்ட வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய விமானப்படை மற்றும் பீரங்கிக் படைகள் களத்தில் ராணுவ வீரர்களுக்கு பக்கபலமாக இருக்கும். லெபனான் மீதான இந்தத் தரைவழித் தாக்குதல் இஸ்ரேலின் அங்கீகரிக்கப்பட்டு அரசியல் அதிகார சபையின் தீர்மானத்துக்கு ஏற்ப மேற்கொள்ளப்படுகிறது. ஆபரேஷன் ‘நார்தன் ஆரோஸ்’ (Northern Arrows) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ராணுவ நடவடிக்கை சூழலுக்கும், தேவைக்கும் ஏற்ப முன்னெடுத்துச் செல்லப்படும்.

அதேவேளையில், காசா மற்றும் பிற முனைகளில் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதலும் தொடரும். போரின் இலக்குகளை அடைய இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது, மேலும் இஸ்ரேல் குடிமக்களைப் பாதுகாப்பதற்கும் வடக்கு இஸ்ரேலின் குடிமக்களை அவர்களின் வீடுகளுக்குத் திரும்பச் செய்வதற்கும் தேவையான அனைத்தையும் செய்து வருகிறது.” எனத் தெரிவித்துள்ளது. லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 95 பேர் கொல்லப்பட்டனர். 170-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

The post ஐ.நா. தொடங்கி, உலக நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் appeared first on Dinakaran.

Tags : I. UN ,Israel ,Lebanon ,Tel Aviv ,UN ,Middle East ,Dinakaran ,
× RELATED மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்.. ஐ.நா....