×

பெண் பயிற்சி மருத்துவா் கொலை விவகாரம்: மேற்கு வங்கத்தில் இளம் மருத்துவர்கள் மீண்டும் பணி புறக்கணிப்பு போராட்டம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இளம் மருத்துவர்கள் மீண்டும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு தொடா்பாக அந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷ், கொல்காத்தாவில் உள்ள தாலா காவல் நிலைய பொறுப்பு அதிகாரி அபிஜீத் மோண்டல் ஆகியோரும் கைது செய்யப்பட்டனா். இந்நிலையில், மருத்துவர் கொலை வழக்கில் விரைந்து விசாரணை நடத்தி நீதி கிடைக்க வேண்டியும், மருத்துவர்களுக்கு எதிராக இதுபோன்ற குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தியும் கடந்த ஆகஸ்ட் முதல் மேற்கு வங்கத்தில் இளம் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து அரசு அளித்த வாக்குறுதிகளை அடுத்து, கடந்த மாதம் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்துவிட்டு பணிக்கு திரும்பிய இளம் மருத்துவர்கள் மீண்டும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இளம் பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு விசாரணை தொடர்பாக, இன்று (அக்.1) மேற்கு வங்க இளம் மருத்துவர்கள் முன்னணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மேற்கு வங்கத்தில் இளம் மருத்துவர்கள் இன்றிலிருந்து முழுமையாக பணிப் புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்தும், மருத்துவமனைகளில் அச்சமற்ற பணிச் சூழல் குறித்தும் அரசு தரப்பிலிருந்து தெளிவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பெண் பயிற்சி மருத்துவா் கொலை விவகாரம்: மேற்கு வங்கத்தில் இளம் மருத்துவர்கள் மீண்டும் பணி புறக்கணிப்பு போராட்டம் appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Kolkata ,Government Medical College Hospital ,Kolkata, West Bengal ,
× RELATED மேற்கு வங்கத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 3 பேர் பலி!!