பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் தென்மேற்கு பருவமழை நிறைவடைந்ததையடுத்து, வடகிழக்கு பருவ மழையை எதிர்பார்த்து பல விவசாயிகள் பல்வேறு காய்கறி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்று வட்டார பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் கோடை மழைக்கு பிறகு, தென்மேற்கு பருவமழையும் அதன்பின், வடகிழக்கு பருவமழையும் அடுத்தடுத்து பெய்வதால், பருவமழையை எதிர்நோக்கி விவசாய பணி மேற்கொள்ள, விவசாயிகள் தங்கள் விளைநிலங்களை உழுது, காய்கறி சாகுபடிக்காக தயார்படுத்துகின்றனர். மேலும், மழை பெய்யும் போது ஆடிப்பட்டம், கார்த்திகை பட்டம், தைப்பட்டம் மற்றும் சித்திரைப்பட்டம் என மானாவாரி சாகுபடியை மேற்கொள்கின்றனர்.
இதில், இந்த ஆண்டில் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை மழை இல்லாமல் இருந்தது. பின் மே மாதத்தில் பல நாட்கள் கோடை மழை பெய்தது. அதன்பிறகு, ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் துவங்கிய தென்மேற்கு பருவமழை, ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் வரை பரவலாக பெய்துள்ளது. அதன்பின் கடந்த ஒரு மாதமாக மழை மிகவும் குறைந்தது. அதிலும் கடந்த இரண்டு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழையை தொடர்ந்து, வடகிழக்கு பருவமழை பெய்யுமா என்று விவசாயிகள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இதற்காக, தங்கள் விளைநிலங்களை உழுது, புதிதாக தக்காளி, வெண்டைக்காய், கத்திரிக்காய் மற்றும் பந்தல் காய்கறிகள் என பல்வேறு காய்கறி சாகுபடியில் புதிதாக ஈடுபட துவங்கியுள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இங்கு, தென்னை சாகுபடி மட்டுமின்றி மானாவாரி மற்றும் பல்வேறு காய்கறி சாகுபடி அதிகளவு உள்ளது. மேலும், சர்க்கரை கரும்பு, நெல் உள்ளிட்டவை குறிப்பிட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் ஏரிப்பாசனம், கிணற்றுப்பாசனம் மூலம் பயிர் சாகுபடி செய்யப்பட்டுகிறது. இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவ மழையையே முழுமையாக நம்புகிறோம். இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை ஓரளவு பெய்துள்ளது.
அடுத்து, வடகிழக்கு பருவ மழையையொட்டி பல கிராமங்களில் கார்த்திகை பட்டத்தை எதிர்நோக்கி விவசாயிகள் பலரும், மானாவாரி பயிர் சாகுபடியையும், புதிதாக பல்வேறு காய்கறி சாகுபடியையும் துவங்கியுள்ளனர். கடந்த ஆண்டில் தென்மேற்கு, மற்றும் வடகிழக்கு பருவமழை அடுத்தடுத்து இருந்தது. அதுபோல், இந்த ஆண்டிலும் வடகிழக்கு பருவமழை வலுக்குமா என எதிர்பார்த்துள்ளோம். கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்யும் போது, விவசாயம் மேலும் செழிக்க வாய்ப்பாக இருக்கும்’’ என்றனர்.
The post பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்களில் வடகிழக்கு பருவ மழையை எதிர்பார்க்கும் விவசாயிகள்: காய்கறி சாகுபடியில் தீவிரம் appeared first on Dinakaran.