×

ஜம்மு-காஷ்மீரில் வாக்குப்பதிவு விறுவிறு: காலை 9 மணி வரை 11.6 சதவீத வாக்குகள் பதிவு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் காலை 9 மணி வரை 11.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்து வரும் நிலையில், கடந்த 18ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவும் (24 தொகுதிகள் – 61.38 சதவீதம்), கடந்த 25ம் தேதி நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் (26 தொகுதிகள் – 57.31 சதவீதம்) நடைபெற்றன. மூன்றாவது மற்றும் இறுதிக்கட்டத்திற்கான இறுதிகட்ட பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. வாக்குப்பதிவு நடைபெறும் 40 தொகுதிகளில், 24 தொகுதிகள் ஜம்மு – பகுதியிலும், 16 தொகுதிகள் காஷ்மீர் பகுதியிலும் உள்ளன.

இறுதிக் கட்டத் தேர்தலில் 415 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களின் வெற்றி-தோல்வியை 39.18 லட்சம் வாக்காளர்கள் தீர்மானிப்பார்கள். 40 தொகுதிகளிலும் 5,060 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 20,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். காலை 9 மணி வரை 11.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதனிடையே பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலின் மூன்றாவது மற்றும் கடைசி சுற்று வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. ஜனநாயகத்தின் திருவிழாவை வெற்றிபெறச் செய்ய அனைத்து வாக்காளர்களும் முன்வந்து வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். முதன்முறையாக வாக்களிக்க இருக்கும் இளம் நண்பர்கள், பெண்கள் அதிக அளவில் வாக்களிப்பில் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டார்.

The post ஜம்மு-காஷ்மீரில் வாக்குப்பதிவு விறுவிறு: காலை 9 மணி வரை 11.6 சதவீத வாக்குகள் பதிவு appeared first on Dinakaran.

Tags : Jammu and Kashmir ,Srinagar ,Union Territory of Jammu and Kashmir ,
× RELATED பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப்...