குடியாத்தம், அக்.1: குடியாத்தம் அருகே விளைநிலத்தில் புகுந்த ஒற்றை யானையை விவசாயிகள் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். தமிழக- ஆந்திர மாநில எல்லையில் உள்ள வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அங்கனாம்பள்ளி கிராமத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒற்றை யானை திடீரென புகுந்தது. பின்னர், அந்த யானை அங்குள்ள விளை நிலத்தில் இறங்கி அங்கு பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை சாப்பிட்டும் மிதித்தும் சேதப்படுத்தியது.
இதை பார்த்த அப்பகுதி விவசாயிகள் உடனே பட்டாசுகள் வெடித்து சுமார் ஒருமணி நேரம் போராடி அந்த ஒற்றை யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். அந்த யானை மீண்டும் விவசாய நிலங்களுக்குள் நுழைய வாய்ப்புள்ளதால் விவசாயிகள் பீதியில் உள்ளனர். மேலும், யானையால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் வனத்துறையினர் யானைகள் நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
The post விளை நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு குடியாத்தம் அருகே நள்ளிரவில் appeared first on Dinakaran.