×

மாமல்லபுரத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள சாட்டிலைட் நகரத்திற்கு கிராமங்கள் தேர்வு: சர்வதேச தரத்திற்கு மாற்ற முடிவு

மாமல்லபுரம்: சென்னைக்கு அருகே புதிய செயற்கைக்கோள் நகரம் மாமல்லபுரம் பகுதியில் உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி சார்பில் இங்கே தரம் உயர்த்தப்பட உள்ள கிராமங்களின் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. ஏற்கனவே, சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், புதிய சுற்றுலா பகுதிகளை உருவாக்குவது, பழைய சுற்றுலா பகுதிகளை மேம்படுத்துவது என்று பல முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னையை ஒட்டியுள்ள திருமழிசை, செங்கல்பட்டு, மீஞ்சூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், மாமல்லபுரம் ஆகிய 6 செயற்கைக்கோள் நகரங்களை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, வளவந்தாங்கல், சந்தானம்பட்டு, நெம்மேலி, கிருஷ்ணங்கரணை, திருப்போரூர், சலுவன்குப்பம், பட்டிப்புலம், தண்டலம், வெங்கலேரி, ஆலத்தூர், கருங்குழிப்பள்ளம், பையனூர், சிறுதாவூர், அதிகமநல்லூர், காரணை,

பஞ்சானந்தூர், அமஞ்சான்பட்டி, அமஞ்சான்பட்டி, அமமுகநல்லூர், அமமுகநல்லூர், தஞ்சைநல்லுார் ஆகிய வருவாய் கிராமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கொக்கிலிமேடு, மாமல்லபுரம், பூஞ்சேரி, காடம்பாடி, மற்றும் பெருமளேரி-வடகடம்பாடி-நல்லான்பிள்ளைப்பெற்றல் ஆகிய 25 கிராமங்கள் தரம் உயர்த்தப்பட உள்ளன. இந்த கிராமங்கள் நகரங்களாக மாற்றப்பட்டு சர்வதேச தரத்திற்கு மாற்றப்பட உள்ளது.

இங்கே இருக்கும் பழமையான புராதன சின்னங்களை பாதிக்காமல், சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக சர்வதேச தரத்திற்கு மாமல்லபுரத்தை சாட்டிலைட் நகரமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.25 கிராமங்கள் சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் நிலையில் மாமல்லபுரம் சென்னையின் புதிய துணை நகரமாக, துணை அடையாளமாக மாறும். இங்கே முதலீடுகள் குவியும், போக்குவரத்து அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

பெரும் பொருட்செலவில் மாமல்லபுரத்தில் சாட்டிலைட் நகரம் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். சென்னைக்கு மிக அருகில் மாமல்லபுரம் உள்ளது. நிறைய கடல் வளம் உள்ளது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் பகுதியாக உள்ளது. இங்கே சாட்டிலைட் நகரம் வரும்பட்சத்தில் இந்த மாமல்லபுரம் மின்சார ரயிலுடன் இணைக்கப்படும். மெட்ரோவும் கூட இங்கே எதிர்காலத்தில் வர உள்ளது. மெட்ரோ பணிகள் இந்த 20 ஆண்டுகளில் இங்கும் முடிக்கப்படும். தற்போது இங்கே சாட்டிலைட் நகரம் அமைப்பதற்கான கன்சல்டன்சி பணிகளுக்கு டெண்டர் விடுக்கப்பட உள்ளது. விரைவில் இதற்கான திட்ட அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னைக்கு இணையாக சர்வதேச தரத்தில் மாமல்லபுரம் இதன் மூலம் உயர்த்தப்படும். அண்ணா சாலை போல பெரிய சாலைகள், உயர்ந்த கட்டிடங்கள், சுற்றுலா அமைப்புகள் இங்கே உருவாக்கப்படும். அதேபோல் புதிய நிறுவனங்கள், முதலீடுகள் இங்கே ஈர்க்கப்படும்.  மேலும் சாலைக்கு கீழே மின்சாரம், ஸ்மார்ட் சிட்டி அமைப்புகள், நவீன கட்டிடங்கள், புதிய பாலங்கள் அமைக்கப்படும். முக்கியமாக இங்கே இருக்கும் கிழக்கு கடற்கரை சாலை வளத்தை பயன்படுத்திக்கொள்ள தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

* டெல்லியை போல் மாறும்
கடந்த காலங்களில் டெல்லி, கொல்கத்தா போன்ற நகரங்களில் சாட்டிலைட் சிட்டிகள் உருவாக்கப்பட்டன. அந்த நகரங்கள் தற்போது பெரிய வெற்றியும் அடைந்துள்ளன. டெல்லியிலும் குர்கிராம், நொய்டா போன்ற இடங்களில் இதேபோல் சாட்டிலைட் நகரங்கள் உருவாக்கப்பட்டன. அதேபோல் மாமல்லபுரத்திலும் சாட்டிலைட் நகரம் கொண்டு வரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மாமல்லபுரத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள சாட்டிலைட் நகரத்திற்கு கிராமங்கள் தேர்வு: சர்வதேச தரத்திற்கு மாற்ற முடிவு appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Tamil Nadu government ,Chennai ,Singara… ,
× RELATED மாமல்லபுரம் மரகத பூங்காவில் ஒளிரும்...