×
Saravana Stores

லெபனானில் தொடர் வான்வழி குண்டுவீச்சை தொடர்ந்து தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்: பதிலடி தர காத்திருப்பதாக ஹிஸ்புல்லா அதிரடி

ஜெருசலேம்: லெபனானில் தொடர்ச்சியாக வான்வழி தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் அடுத்தகட்டமாக தரைவழி தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருகிறது. இஸ்ரேல் படைகள் நுழைந்தால் சரியான பதிலடி தர தயாராக இருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பின் துணைத்தலைவர் காஸிம் கூறி உள்ளார். காசாவில் ஹமாசுக்கு எதிராக கடந்த ஓராண்டாக போர் புரிந்து வரும் இஸ்ரேல், அடுத்தகட்டமாக லெபனானில் ஹிஸ்புல்லா போராளிகளையும், ஏமனில் ஹவுதி படையினரையும் குறிவைத்து போரை விரிவுபடுத்தி உள்ளது.

கடந்த 27ம் தேதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா தலைமையகம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் அந்த அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா பலியானார். அதன்பிறகும் பெய்ரூட் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 10 நாளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கியமான 6 தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் பல்வேறு ஆயுத கிடங்குகள் அழிக்கப்பட்டுள்ளன. 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தனது தாக்குதலை விரிவுபடுத்தி வருகிறது. சுமார், ஓராண்டுக்குப் பிறகு முதல் முறையாக பெய்ரூட்டின் மத்திய பகுதியில் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், அடுக்குமாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இந்த தாக்குதலில், பாலஸ்தீனத்தின் விடுதலைக்கான பாப்புலர் முன்னணி அமைப்பை சேர்ந்த 3 போராளிகள் உட்பட 4 பேர் பலியாகினர். இதுதவிர இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில், லெபனானின் துறைமுக நகரமான டயரில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாமில் இருந்த லெபனானுக்கான ஹமாசின் தலைவர் பதாப் ஷெரீப் அவரது குடும்பத்துடன் பலியானதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 105 பேர் பலியாகி இருப்பதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெய்ரூட்டில் இருந்து 45 கிமீ தொலைவில் உள்ள சிடோன் நகரில் நேற்று நடத்தப்பட்ட 2 குண்டுவீச்சில் 32 பேர் பலியானதாக லெபனான் சுகாதார துறை தெரிவித்துள்ளது. மேலும் வடக்கு மாகாணமான பால்பெக் ஹெர்மலில் வீசப்பட்ட குண்டுவீச்சில் 21 பேர் பலியாகி உள்ளனர். பெய்ரூட்டின் தெற்கு, மத்திய பகுதியிலும், பீகா நகரை சுற்றிலும் இடைவிடாத தாக்குதல் நடத்தப்படுகிறது. அடுத்தகட்டமாக இஸ்ரேல் ராணுவம் லெபனானில் தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. தெற்கு லெபனானின் அல் அப்பாசியா, ஹரூப், பெடியாஸ் பகுதிகளில் இஸ்ரேல் துருப்புகள் தரைவழி சோதனையிலும் நேற்று ஈடுபட்டன.

ஹிஸ்புல்லா அமைப்பினரை தேடி அவர்கள் இந்த சோதனை நடத்தி உள்ளனர். இதற்காக கூடுதல் படைகள் எல்லையை நோக்கி நகர்த்தப்பட்டுள்ளன. இதனால் எந்த நேரத்திலும் லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தரை வழி தாக்குதலை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காசாவில் ஹமாசை குறிவைத்து தரைவழி தாக்குதல் நடத்தியது போல லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினரை தேடி தரைவழி தாக்குதல் நடத்தப்பட உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே நஸ்ரல்லா இறப்புக்குப் பிறகு ஹிஸ்புல்லா அமைப்பின் துணைத் தலைவர் நயிம் காஸிம் நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது அவர், இஸ்ரேல் தரைவழியாக நுழைந்தால் அவர்களை விரட்டியடிக்க ஹிஸ்புல்லா படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும், தங்களின் எந்த ஆயுத பலமும் குறையவில்லை என்றும், 2006ஐ போல இப்போரில் ஹிஸ்புல்லா வெற்றி பெறும் என்றும் அவர் சூளுரைத்துள்ளார். இதற்கிடையே, ஏமனில் துறைமுக நகரங்களான ஹோடைதா, ராஸ் இசா ஆகிய இடங்களில் நேற்று முன் தினம் போர் விமானம் மூலம் இஸ்ரேல் குண்டுவீசியது. இதில் 4 பேர் பலியாகி உள்ளனர். ஏமனில் எண்ணெய் சேமிப்பகங்கள் மற்றும் 2 மின் உற்பத்தி மையங்களை குறிவைத்து இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது. இவ்வாறு இஸ்ரேல் ராணுவம், லெபனான், காசா, ஏமன் என மும்முனையிலும் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால் மத்திய கிழக்கில் நிலைமை பதற்றமாகவே உள்ளது.

* பதிலடி தருவோம் ஈரான் அறிவிப்பு
ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இஸ்ரேலின் எந்த குற்றச் செயல்களுக்கும் பதிலளிக்காமல் விட்டு விடமாட்டோம். ஈரானின் தேசிய பாதுகாப்பிற்கு எதிராக நிற்கும் எவரும் சந்தேகத்திற்கு இடமின்றி ஈரானிடமிருந்து பதிலைப் பெறுவார்கள். ஈரான் தக்க நடவடிக்கை எடுக்கும்’’ என்றார். ஹிஸ்புல்லா, ஹவுதி அமைப்புகள் ஈரான் ஆதரவில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

* அமெரிக்கா எச்சரிக்கை
வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஹிஸ்புல்லா அமைப்பு தற்போது முக்கிய தலைவர்களை இழந்துள்ளது. அவர்கள் எப்படி தங்களின் புதிய தலைமையை நிரப்பப் போகிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஆனாலும், தலைமை இல்லாவிட்டாலும் அந்த அமைப்பினர் பலரும் வெளியில் உள்ளனர். அவர்கள் விரைவில் மீண்டு வருவதற்கான முயற்சிகள் செய்கின்றனர். எனவே ஹிஸ்புல்லா விரைவில் பதிலடியை தர வாய்ப்புள்ளது’’ என்றார்.

The post லெபனானில் தொடர் வான்வழி குண்டுவீச்சை தொடர்ந்து தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்: பதிலடி தர காத்திருப்பதாக ஹிஸ்புல்லா அதிரடி appeared first on Dinakaran.

Tags : Israel ,Lebanon ,Hizbollah ,Jerusalem ,Qassim ,Hezbollah ,Hamas ,Gaza… ,Hizbullah ,
× RELATED லெபனானின் பால்பெக் நகர மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு