×

தன்னை நேரில் வந்து சந்திப்பதை தவிர்க்குமாறு அன்போடும், உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்: திமுக தொண்டர்களுக்கு துணை முதலமைச்சர் வேண்டுகோள்

சென்னை: தன்னை நேரில் வந்து சந்திப்பதை தவிர்க்குமாறு அன்போடும், உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன் என திமுக தொண்டர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். இதனிடையே, கடந்த ஆண்டு அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை ஒதுக்கப்பட்டது.

கடந்த சில காலமாக உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு திமுக நிர்வாகிகள் பேசி வந்தனர். பின்னர், இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஏமாற்றம் இருக்காது, மாற்றம் இருக்கும்” என்று அமைச்சரவை மாற்றம் குறித்தும், உதயநிதியின் துணை முதல்வர் பதவி குறித்தும் உறுதிப்படுத்தினார். இதற்கிடையே, அமைச்சரவை மாற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தார்.

அதன்படி, தமிழ்நாடு அமைச்சரவை மாற்றத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். அதன்படி, உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு பல்வேறு திரைத்துறையினர், அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் அந்தவகையில், தன்னை நேரில் வந்து சந்திப்பதை தவிர்க்குமாறு திமுக தொண்டர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப்பக்கத்தில் கூறுகையில்,

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள், என்னை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்ற முனைப்போடு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வருகிறீர்கள். உங்களுடைய அன்பு என்னை நெகிழச் செய்கிறது. அதற்கு என்றும் நன்றிக்குரியவனாக நான் இருப்பேன்.

எனினும், நம் கழகத்தலைவர் – முதலமைச்சர் அவர்களின் கட்டளையின்படி, அவரவர் பகுதிகளில் நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. எனவே, மக்கள் பணி – கழகப்பணியில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்.
என்னைச் சந்திப்பதற்காகச் சென்னைக்குப் பயணம் செய்வதைக் கழக உடன் பிறப்புகள் தவிர்க்குமாறு அன்போடும், உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன். பல்வேறு மாவட்டங்களில் நான் அடுத்தடுத்துச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், நானே உங்களை அங்கே நேரில் சந்தித்து உங்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொள்கிறேன்.

நன்றி. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

The post தன்னை நேரில் வந்து சந்திப்பதை தவிர்க்குமாறு அன்போடும், உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்: திமுக தொண்டர்களுக்கு துணை முதலமைச்சர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,DMK ,CHENNAI ,Deputy Chief Minister ,Udayanidhi Stalin ,Udhayanidhi Stalin ,Chennai Chepakkam ,Tiruvallikeni ,Dinakaran ,
× RELATED மாநிலங்களின் சுயமரியாதையை மீட்க...