×

கோடியக்கரை அருகே பரபரப்பு நடுக்கடலில் மீனவர்கள் திடீர் மோதல்

*3 பேர் படுகாயம்

நாகப்பட்டினம் : கோடியக்கரை அருகே நடுக்கடலில் மீனவர்கள் திடீர் மோதலில் செருதூர் மீனவர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே செருதூர் கிராமத்தில் இருந்து செருதூர் எல்லையம்மன் கோயில் தெருவை சேர்ந்த சத்தியராஜ் (40) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த சற்குணம் (35), செந்தில்(50), வடக்கு தெருவை சேர்ந்த வில்பிரட்(30) ஆகிய 4 பேர் பைபர் படகில் நேற்றுமுன்தினம் காலை 10 மணியளவில் மீன்பிடிக்க சென்றனர். அதே போல் செருதூர் வடக்கு தெருவை சேர்ந்த கணேசமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி(40), ஆனந்தவேல்(38), அஜித்(24), கணேசன்மூர்த்தி (30) ஆகியோரும் மீன்பிடிக்க சென்றனர்.

செருதார் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த செந்தில்(42) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் டி,ஆர்.பட்டினத்தை சேர்ந்த மணிவண்ணன்(28), காரைக்கால் மேடு பகுதியை சேர்ந்த அருள்வடிவேல்(40), சரவணன்பிள்ளை, ரமேஷ்(38) ஆகியோர் நேற்று காலை 9.30 மணிக்கு மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரை அருகே தோப்புத்துறையில் இருந்து கிழக்கே 23 நாட்டிகள் கடல் மைல் தூரத்தில் தங்களது படகை நங்கூரம் இட்டு நிறுத்தி வைத்திருந்தனர்.

அப்போது அந்த வழியாக விசைப்படகில் வந்த அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் ரவீந்திரன், அமிர்தலிங்கம் ஆகியோர் செருதூர் மீனவர்கள் கடலில் நிறுத்தி இருந்த பைபர் படகின் வலையை அறுத்துவிட்டு சென்றனர். இதுதொடர்பாக கேட்டதற்கு செருதூர் மீனவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் 3 பைபர் படகுகளையும் தங்களது விசைப்படகில் கட்டி இழுத்து சென்றதோடு, இரும்பு உருண்டை, ஐஸ் கட்டியை வீசி செருதூர் மீனவர்களை நடுக்கடலில் தாக்கினர்.

இதில் படுகாயமடைந்தவர்கள் நேற்று மாலை செருதூர் கிராமத்திற்கு வந்தனர். இதில் மீனவர்கள் செந்தில் (50), வில்பிரட்(30), சத்தியமூர்த்தி(40) ஆகிய மூன்று பேரும் நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். டாக்டர் குழுவினர் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து கீழையூர் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கோடியக்கரை அருகே பரபரப்பு நடுக்கடலில் மீனவர்கள் திடீர் மோதல் appeared first on Dinakaran.

Tags : Kodiakkarai ,Nagapattinam ,Serudur ,Kodiyakarai ,Satyaraj ,Cherudur ,Velanganni ,Serudhur Behanayamman Koil Street ,Dinakaran ,
× RELATED டிச.26ம் தேதி முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்