- சர்வதேச தரத்தில் உள்ள மாநகராட்சி பள்ளி
- கொளத்தூர்
- பெரம்பூர்
- கழகம் ஆரம்பப் பள்ளி
- சென்னை கார்ப்பரேஷன் கல்வி
- தின மலர்
பெரம்பூர், செப்.30: கொளத்தூரில், சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.4.23 கோடியில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் உலக தரத்தில் மாநகராட்சி தொடக்கப் பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ், 206 தொடக்க பள்ளிகள், 13 நடுநிலை பள்ளிகள், 46 உயர்நிலை பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலை பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
அரசு பள்ளிகள் என்றால் ஓடுகள் வேயப்பட்ட பழைய சுவர், மரத்தடி பாடம், அசுத்தமான கழிவறைகள் என்று இருந்த நிலைமை மாற்றப்பட்டு, தற்போது தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகள் வசதிகளில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளைவிட அரசு பள்ளிகளின் தரம் உயர்த்துவதற்கான அனைத்து பணிகளும் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.குறிப்பாக, ‘சிட்டிஸ்’ மற்றும் ‘சிங்கார சென்னை 2.0’ ஆகிய திட்டங்களின் கீழ், சென்னை மாநகராட்சி பள்ளிகள் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படுகின்றன. இதில், ஸ்மார்ட் வகுப்பறைகள், சிசிடிவி கேமரா, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வை-பை வசதி, வண்ணமயமான வகுப்பறை, இருக்கைகள் என சர்வதேச தரத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல், சமையலறையும், மாணவர்கள் அமர்ந்து சாப்பிடும் வகையில் ‘டைனிங்’ வசதியுடன் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. ‘ஹைடெக்’ ஆய்வகங்கள், கால்பந்து, கைப்பந்து, பூப்பந்து உள்ளிட்ட விளையாட்டு மைதானங்களும் பள்ளிகளில் அமைக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், கொளத்தூர் சட்டமன்ற தொகுதி, 69வது வார்டுக்கு உட்பட்ட ஜி.கே.எம் காலனி 12வது தெருவில் உள்ள சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி, நவீன கட்டமைப்பு வசதிகளுடன் தற்போது உலக தரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
கடந்த 1970ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளியின் கட்டிடம் சிதலமடைந்து காணப்பட்டதால், புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும், என மாணவர்களின் பெற்றோர், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த பள்ளி கட்டிடம் முழுவதும் இடிக்கப்பட்டது. இதில் பயின்ற மாணவர்கள் அருகில் செயல்பட்டு வரும் சென்னை மாநகராட்சி பள்ளிக்கு மாற்றப்பட்டனர். இதையடுத்து, சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.2.43 கோடி மதிப்பீட்டிலும், மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.1.80 கோடி என மொத்தம் ரூ.4.23 கோடி மதிப்பீட்டில், பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்றன.
அனைத்து பணிகளும் முடிவுற்று கடந்த 24ம் தேதி, முதல்வர் மு,க.ஸ்டாலின், இந்த பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த பள்ளி கட்டிடத்தில், கீழ் தளத்தில் 4 வகுப்பறைகள் மற்றும் தலைமை ஆசிரியர் அலுவலகம். முதல் தளத்தில் 5 வகுப்பறைகள், 2வது தளத்தில் 2 வகுப்பறைகள், ஒரு ஆடிட்டோரியம் என பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும் ஒரு ஸ்மார்ட் கிளாஸ் ரூம், சத்துணவுக்கூடம், விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய விளையாட்டு திடல், பள்ளியை சுற்றிலும் மரக்கன்றுகள் என பசுமையான தோற்றத்துடன் தனியார் பள்ளியை விட மிக நேர்த்தியாக இந்த பள்ளி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கழிப்பறை மற்றும் பொது கழிப்பறை வசதிகள், பள்ளியை சுற்றி மதில்சுவர் மற்றும் குழந்தைகளின் பாதகாப்பிற்காக 2 மாடியிலும் கிரில் கேட் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமணி கூறுகையில், ‘‘இந்த பள்ளியை பார்த்தால் யாரும் மாநகராட்சி தொடக்கப்பள்ளி என கூற மாட்டார்கள். தனியார் பள்ளிகளுக்கு இணையாக இந்த பள்ளி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வகுப்பறையிலும் 6 மின்விளக்கு மற்றும் 4 மின்விசிறிகள் காற்றோட்டமான சூழ்நிலை, விளையாடுவதற்கு மிகப்பெரிய இடம் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் இங்கு இடம் பெற்றுள்ளன. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது மிகவும் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் வருகின்றனர். இந்த பள்ளியில் தற்போது 121 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். அடுத்த கல்வி ஆண்டு முதல் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கும், என எதிர்பார்க்கிறோம்,’’ என்றார்.
The post கொளத்தூரில் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.4.23 கோடியில் நவீன வசதியுடன் சர்வதேச தரத்தில் மாநகராட்சி பள்ளி: மாணவர்கள், பெற்றோர் வரவேற்பு appeared first on Dinakaran.