தென்காசி,செப்.29: தென்காசி, குற்றாலம் பகுதியில் நேற்று அரை மணி நேரம் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இருந்த போதும் மேற்கு தொடர்ச்சி மலையின் நீர் பிடிப்பு பகுதியில் போதுமான மழை இல்லாதததால் அருவிகளில் தண்ணீர் வரத்து இல்லாததால் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளித்தனர். தென்காசி, குற்றாலம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பகல் நேரங்களில் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டத. வெயிலின் தாக்கத்தால் இரவு நேரங்களில் புழுக்கத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.இந்நிலையில் நேற்று மதியம் வரை வெயிலில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதியத்திற்கு பிறகு திடீரென மேக கூட்டம் திரண்டு சுமார் அரை மணி நேரம் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக தென்காசி நகர்ப்புறப்பகுதிகளில் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. குற்றாலம் ஊருக்குள்ளும் சற்று மழை காணப்பட்டது. ஆனால் மேற்கு தொடர்ச்சி மலையின் நீர் பிடிப்பு பகுதியில் போதுமான அளவு மழை இல்லை. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கவில்லை. குற்றாலம் மெயினருவியில் ஆண்கள் பகுதியில் ஓரளவு நன்றாகவும், பெண்கள் பகுதியில் குறைவாகவும் தண்ணீர் விழுந்தது. ஐந்தருவியிலும் இரண்டு பிரிவுகளில் ஓரளவு நன்றாகவும், மற்ற பிரிவுகளில் சுமாராகவும் தண்ணீர் விழுந்தது. பழைய குற்றால அருவி, புலி அருவி ஆகிவற்றில் குறைவாக தண்ணீர் விழுந்தது. நேற்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும், குற்றாலம் சிஎஸ்ஐ கிறிஸ்தவர்களின் ராக்கால் பண்டிகை காரணமாகவும், பள்ளி விடுமுறை காரணமாகவும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் மெயினருவியில் பெண்கள் பகுதியில் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
The post குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் appeared first on Dinakaran.