×

புழல் சிறையில் கைதிகளை சந்திப்பதற்கு புதிய நடைமுறை எதிர்த்து வழக்கு

 

சென்னை, செப்.29: புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளை சந்திப்பதற்கு ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும், ஒரு நேரத்தில் ஒரு கைதியை மட்டுமே சந்திக்க அனுமதி வழங்கப்படும், சிறையில் கைதிகளுடன் இன்டர்காம் மூலம் மட்டுமே பேச அனுமதிக்கப்படும் என்பன உள்ளிட்ட புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதை எதிர்த்து வழக்கறிஞர் ஆனந்த் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், ஏ.டி.மரியா கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.காசிராஜன், புதிய நடைமுறைகள் காரணமாக, விசாரணை கைதிகளை சந்திப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கைதிகளை தங்களது குறைகளை தெரிவிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக், கைதிகளை சந்திக்கும் நேரம் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இன்டர்காம் மூலம் பேசினால் அது பதிவு செய்யப்படும் என்ற அச்சம் கைதிகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, நேரடியாக பேசும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். புழல் சிறையில் கைதிகளை சந்திக்க வரும் வழக்கறிஞர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும்படி கடந்த ஆண்டு நிர்வாக ரீதியாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அமல்படுத்தப்பட்டதா என்று கேட்டனர். இதற்கு பதிலளித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை அக்டோபர் 1ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

The post புழல் சிறையில் கைதிகளை சந்திப்பதற்கு புதிய நடைமுறை எதிர்த்து வழக்கு appeared first on Dinakaran.

Tags : Puzhal Jail ,Chennai ,Puzhal Central Jail ,
× RELATED புழல் சிறையில் பெண் கைதியிடம் செல்போன் பறிமுதல்