×

திமுக பவளவிழா பொதுக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துரை

சென்னை: திமுக பவளவிழா பொதுக் கூட்டத்தில் மக்கள நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துரை வெளியிட்டுள்ளார். “இன்றைய பெருவிழாவில், தவிர்க்கவே இயலாத காரணங்களால் என்னால் பங்கேற்க இயலவில்லை, திமுக பவள விழாவில் பங்கேற்க இயலவில்லையே என்ற மனமார்ந்த வருத்தம் எனக்குள் இருக்கிறது, திமுக பவள விழா பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தினர் பங்கேற்றுள்ளதில் உவகை அடைகிறேன்” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துரையில்; “ஆதிக்கச் சக்திகளுக்கு எதிரான போர் முழக்கத்தை முன் வைத்து முனைப்போடு தொடங்கப்பட்ட பேரியக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். தந்தை பெரியார் தந்துவிட்டுச் சென்ற திராவிடச் சித்தாந்தத்தை அவரின் தளபதியான பேரறிஞர் அண்ணாவும், தம்பியான முத்தமிழறிஞர் கலைஞரும், பேரனான தளபதி ஸ்டாலின் அவர்களும் தோளில் சுமக்கத் துவங்கி 75 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்கின்றன.

ஆபத்தான சித்தாந்தங்கள் நாட்டை ஆக்கிரமிக்கத் துடிக்கையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க, மாநிலத் தன்னாட்சியைப் பாதுகாக்க ஒரு கோட்டைச் சுவர் போல எழுந்து நிற்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். இந்தக் கோட்டை இங்கிருக்கும் வரை தமிழ்நாட்டிலிருந்து ஒரு செங்கலைக் கூட எவரும் எடுத்துச் செல்ல முடியாது.

அனைத்துச் சமூக இயக்கங்களைப் போலவே திராவிட முன்னேற்றக் கழகமும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்திருக்கிறது. ஆனால், தமிழர் நலன் காக்கும் பணியில் சோர்வுற்றதே இல்லை. பிறப்பினால் அனைவரும் சமம் எனும் சமூகநீதிச் சித்தாந்தத்தைத் தலையில் கிரீடமாகச் சூடி, தான் தேர்ந்து கொண்ட செயல்களில் சற்றும் தொய்வுறாமல் நிமிர்ந்து நடைபோட்டு வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவளவிழாக் காலத்தில், அதன் பணிகளில் கூட்டிணைந்து செயல்பட வேண்டியது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டோரின் கடமை. சகோதரச் சக்திகளுக்கு இடையே ஏற்படும் சிறு முரண்கள் கூட மதவாதச் சக்திகளுக்குச் சாதகமாகி விடும் ஆபத்து இருக்கிறது என்பதை உரக்கச் சொல்ல மக்கள் நீதி மய்யம் கடமைப்பட்டிருக்கிறது.

இந்தத் தருணத்தில் நான் நடித்த சத்யா படத்தில் “பாரத நாட்டுக்கொரு கோட்டைச் சுவர் நாமாக… ஆயிரம் பேதங்களும் வாதங்களும் தூளாக” என கவிஞர் வாலி எழுதிய பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. இந்தக் கோட்டைச் சுவரில் எங்கேனும் ஒரு கீறல் விழாதா என எதிரிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பாவம், அவர்களது பகற்கனவுகள் ஒருபோதும் பலிக்கப்போவதில்லை.

இரண்டாயிரம் ஆண்டுகளாய் இம்மண்ணில் நீடித்த தீண்டாமை எனும் கொள்ளை நோய்க்கும், ஆதிக்கம் எனும் தொற்று நோய்க்கும், ஏற்றத் தாழ்வு எனும் புற்றுநோய்க்கும் 75 வருடங்களாகத் திமுக தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறது.

திமுக என்றால் என்ன? ஒரே வரியில் சொல்லுங்கள் என்று என்னிடம் கேட்டால், ‘தமிழுக்கும், தமிழருக்கும் உண்டான பங்கையும், மரியாதையையும் வேற்று சக்திகள் கெடுக்க முனைந்தால், தடுக்கப்பாய்ந்து வரும் தமிழரின் கேடயம்’ என்பேன்.

அனைத்துத் துறைகளிலும் அந்நிய மொழியை நுழைக்க முயன்றதை எதிர்த்த ‘ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டமாகட்டும், தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதை எதிர்த்த ‘வடக்கு வாழ்கிறது தெற்குத் தேய்கிறது’
எனும் முழக்கமாகட்டும் தமிழர்களின் நலன்களுக்காகக் களமாடுவதில் திமுக என்றும் சளைத்ததில்லை.

முத்தமிழறிஞர் கலைஞர் இந்தியாவில் வேறெங்கும் இல்லாத வகையில் சமூகநீதிக் கொள்கையை முன்னெடுத்த விதம் சரித்திரச் சிறப்பு வாய்ந்தது. சமூகத்தின் ஒளி பாயாத பகுதிகளிலும் தன் சிந்தனையின் கூர்மையால், திட்டங்கள் தீட்டி, ‘எல்லோரும் சமமென்பதை’ உறுதி செய்த பெருமகனார் கலைஞர். அவரது தலைமையில் பொன் போல் பொலிந்தது இந்த இயக்கம்.

இன்றைக்கு, எனது அருமை நண்பர் மு.க.ஸ்டாலின் கைகளில் திமுக மென்மேலும் மெருகு கூடி, இந்திய நாடெங்கும் திராவிடச் சிந்தனைகள் பொலிகின்றன. வடக்கு மாநிலங்களும் திரு.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் திட்டங்களைச் செயற்படுத்த முனைப்புக் காட்டுகின்றன என்பது தமிழர்கள் பெருமைகொள்ளத்தக்க ஒன்று.

இன்றையப் பெருவிழாவில், தவிர்க்கவே இயலாத காரணங்களால் என்னால் நேரில் கலந்துகொள்ள இயலவில்லையே என்ற மனமார்ந்த வருத்தம் எனக்குள் இருக்கிறது. மற்றொரு புறம் விழாக்கோலத்தை மனக்கண்ணில் கண்டு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. எனது சார்பாக இந்தப் பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தார் கலந்துகொண்டிருப்பதில் உவகை அடைகிறேன்.

எழுபத்தைந்து ஆண்டுகள் கண்ட இப்பேரியக்கம் இன்னும் பல நூறாண்டுகள் செழித்துத் துலங்க வேண்டும். தன் சமூகக் கடமைகளை ஆற்றியபடியே இருக்க வேண்டும் என உளமார வாழ்த்துகிறேன். அதைச் செய்து காட்ட வேண்டிய கடமையும் பொறுப்பும் இளைய தலைமுறைக்கும் இருக்கிறது என்பதை என் அருமைத் தம்பி உதயநிதி ஸ்டாலினுக்கும் அவரது இளைஞர் படைக்கும் நினைவூட்ட விரும்புகிறேன். பவள விழா கொண்டாடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகள் அனைவருக்கும் என் மனமார்ந்த அன்பும் வாழ்த்தும்” என தெரிவித்துள்ளார்.

The post திமுக பவளவிழா பொதுக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துரை appeared first on Dinakaran.

Tags : People's Justice ,Mayam Chairman ,Kamal Hassan ,Dimuka Coral Festival General Meeting ,Chennai ,Kamal Hasan ,Dimuka Coral Festival ,Dinakaran ,
× RELATED மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவர்...