சென்னை: சென்னை மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்ப பெற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.இது தொடர்பாக ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: சொத்து வரி 6 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே மின் கட்டணம், வாகன வரி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு ஆகியவற்றால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வரியை உயர்த்துவதால் பொருளாதாரத்தில் சிரமத்தில் இருக்கின்ற தமிழக மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கும். எனவே தமிழக அரசு, சொத்து வரி சம்பந்தமான தீர்மானத்தை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: 6 சதவீத சொத்துவரியை உயர்த்தியிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஏழை, எளிய மக்களை நேரடியாக பாதிக்கும் சொத்துவரி உயர்வுக்கான தீர்மானத்தை உடனடியாக திரும்ப பெறுவதோடு, வருவாயை பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்தையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.
The post சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும்: ஜி.கே.வாசன், டிடிவி வலியுறுத்தல் appeared first on Dinakaran.