×
Saravana Stores

கொடைக்கானலுக்கு டூரா? வாகன ஓட்டிகளே உஷார்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பல்வேறு சுற்றுலா இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு செல்ல ஏற்கனவே ஒருவழிப்பாதை முறை நடைமுறையில் இருந்தது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்கள், கொடைக்கானல் ஏரிச்சாலை பகுதியில் வலதுபுறமாக திரும்பி அப்சர்வேட்டரி வழியாக மோயர் பாயிண்ட் பகுதியில் நுழைந்து, பின்னர் அங்கிருந்து பைன் மரக்காடுகள், குணா குகை, தூண் பாறை, வழியாக வந்து பாம்பார்புரம் சாலை வழியாக கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக், கொடைக்கானல் ஏரி சாலையில் முடிவடையும் வகையில் இருந்தது. இதில் மாற்றம் செய்வது குறித்து பல்வேறு தரப்பினரிடம் போலீசார் ஆலோசனை நடத்தினர்.

திண்டுக்கல் எஸ்பி பிரதீப் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடைக்கானலில் நேரடியாக ஆய்வு செய்தார். இதனையடுத்து புதிய ஒரு வழிப்பாதை முறை இன்று (செப். 28) முதல் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் கோக்கர்ஸ் வாக் வழியாக, பாம்பார்புரம் சாலை, தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் பாயிண்ட் வழியாக வெளியேறி, அப்சர்வேட்டரி சாலை வழியாக கொடைக்கானல் ஏரி பகுதியை அடையும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த சுற்றுலா இடங்களுக்கு சுற்றுலா பேருந்துகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகன நெரிசல் ஏற்படாதவண்ணம் அவற்றை கட்டுப்படுத்த பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் இந்த பகுதியில் அனுமதிக்கப்படாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதேபோல கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பேருந்துகள் அனைத்தும் பழைய அப்சர்வேட்டரி சாலை பகுதியில் நிறுத்திக் கொள்ள வேண்டும். கொடைக்கானலில் இருந்து பூம்பாறை, மன்னவனூர் உள்ளிட்ட மேல்மலை பகுதிகளுக்கு பேருந்துகள் செல்ல அனுமதிக்கப்படும். கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் கோல்ப் கிளப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அப்பர் லேக் சாலை வழியாகத்தான் கொடைக்கானலுக்கு திரும்பி வரவேண்டும். தற்போது நடைமுறைப்படுத்தப்பட உள்ள ஒரு வழிப்பாதை நடைமுறை பல ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானலில் நடைமுறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post கொடைக்கானலுக்கு டூரா? வாகன ஓட்டிகளே உஷார் appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dindigul District ,Kodaikanal Aerichalai ,Moir Point ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல் வனப்பகுதியில் அழுகிய...