* சிறப்புச் செய்தி
சென்னையில் மழை காலம் தொடங்கும்போது மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது வழக்கம். கடந்த காலங்களில் கன மழை பெய்யும் போது சென்னையே மிதக்கும் நிலை இருந்து வந்தது. திமுக ஆட்சிக்கு வந்து புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில், மழை வெள்ள பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகளை ஏற்படுத்துவதற்கான பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக சென்னை மாநகர பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு நல்ல பலனை தந்துள்ளது. அதேபோன்று சென்னை புறநகர் பகுதிகளிலும் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
இது ஒருபுறம் நடைபெற்று வந்தாலும் எத்தனை திட்டங்கள் போட்டாலும், வெள்ள நீரை கடலுக்கு கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றுவது ஆறுகள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள்தான். அவற்றை தூர்வாரி சுத்தப்படுத்தினால்தான் இப் பிரச்னைக்கு முழு அளவில் பலன் கிடைக்கும். குறிப்பாக கால்வாய்களில் குப்பையை கொட்டுவது, கட்டுமான கழிவுகள் உள்ளிட்டவைகளை சட்டவிரோதமாக கொட்டுவதால் அடைப்பு ஏற்பட்டு மழைக் காலங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும் சில இடங்களில் ஒப்பந்தம் போட்டும் பணிகள் தொடங்கப்படாதது மழைநீர் தேக்கத்துக்கு காரணமாக அமைந்துவிடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.
குறிப்பாக சென்னையில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள மிக வேகமாக வளர்ந்து வரும் நகரில் ஒன்றாக சிறுசேரி உள்ளது. இப்பகுதியில் சுமார் 1000 ஏக்கரில் தொழில் நுட்ப பூங்கா அமைந்துள்ளது. இதனால் கிராமப் பகுதியாக இருந்த சிறுசேரி, தற்போது நகரப் பகுதியாக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் குடியிருப்புகளும் அதிக அளவில் பெருகியுள்ளன. மக்கள் தொகை பெருக்கமும் அதிகரித்து வருகின்றன. சிறுசேரி பகுதிகளில் மழைக் காலங்களில் வெள்ளம் வெளியேறக் கூடிய ஒரே வழியாக சிறுசேரி உபரி நீர் கால்வாய் உள்ளது. அதாவது, சிறுசேரி கால்வாய், சிறுசேரி மயிலன் தாங்கல் ஏரி மற்றும் சிறுசேரி நகர் மற்றும் கழிப்பட்டூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து உபரி நீரை கொண்டு செல்கிறது. இந்த கால்வாய் வழியாக மழைநீர், திருப்போரூர் தெற்கு பக்கிங்ஹாம் கால்வாயில் இணைந்து கடலில் கலக்கிறது.
ஆனால், சிறுசேரி உபரி நீர் கால்வாயில் தடுப்புச்சுவர் இன்றி உள்ள நிலையில், சிலர் சட்ட விரோதமாக குப்பை, கட்டிட கழிவுகளை கொட்டிச் செல்கின்றனர். கண்மூடித்தனமாக கழிவு பொருட்களை கொட்டிச் செல்வதால் தற்போது சிறுசேரி கால்வாயில் குப்பைதேங்கி மழை நீர் பெரிய அளவில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முறையாக தூர்வாரப்படாமல் உள்ளதாலும், தொடர்ந்து குப்பையை கொட்டுவதாலும் இந்த கால்வாய் மிக மோசமாக சேதமடைந்துள்ளது.இதனால் மழைக்காலங்களில் சிறுசேரி, கழிப்பட்டூர் உள்ளிட்ட அருகில் உள்ள பகுதிகள் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். கடந்த மழைக் காலங்களிலும் இதே நிலை நீடித்ததை தொடர்ந்து, தமிழக அரசு அதிகாரிகள் சிறுசேரி உபரி நீர் கால்வாயை ஆய்வு செய்து தூர்வாரும் பணியை தொடங்க திட்டமிட்டனர்.
தற்போது சிறுசேரி கால்வாய் 1,124 கனஅடி வெள்ளம் தாங்கும் திறன் கொண்டதாக உள்ளது. இதை 2,570 கனஅடி நீர் செல்லும் வகையில் குப்பையை அகற்றி கால்வாயை விரிவுப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கால்வாய் மொத்தம் 4.9 கி.மீ தூரமுள்ளது. இந்த கால்வாயில் 1.5 கி.மீ தூரத்துக்கு குப்பை கழிவுகள் குவிந்து மழைநீர் வெளியேற முடியாத அளவுக்கு கடுமையாக சேதமடைந்துள்ளது. தற்பேது சிறுசேரி கால்வாயை தூர்வார திட்டமிட்டு, நீர்வளத்துறை மூலம் டெண்டர் விடப்பட்டது. கடந்த 2023ம் ஆண்டு இந்த பணிகளுக்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.
இதன் மூலம் சிறுசேரி உபரி நீர் கால்வாயில் குப்பைகளை அகற்றி, கால்வாயை விரிவுபடுத்தும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டு, பணிகளை தொடங்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். இதற்கான ஒப்பந்த நிறுவனமும் அதற்கான இயந்திரங்களை கொண்டு வந்திருந்தனர். ஆனால் திடீரென பணிகள் அப்படியே நிறுத்தப்பட்டு விட்டன. கடந்த ஒரு ஆண்டாக எந்த ஒரு பணிகளும் நடைபெறாததால், கால்வாய் சீரமைக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், கடந்த ஆண்டை போன்று கனமழை பெய்யும் பட்சத்தில் இப்பகுதி வெகுவாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, உடனடியாக சிறுசேரி கால்வாய் தூர்வாரும் பணிகளை தொடங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
* நிதி ஒதுக்கினால் பணிகள் தொடரும்…
சிறுசேரி கால்வாய் தூர்வாரும் பணி குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சிறுசேரி கால்வாய் சீரமைப்பு பணி என்பது மிக முக்கியமான ஒன்றுதான். இப்பணிகள் நடைபெற்றால் வளர்ந்து அப்பகுதியில் பெரிய அளவில் மழைநீர் பாதிப்பை தடுக்க முடியும். கடந்தாண்டு செப்டம்பர் 1ம் தேதி ரூ.13.76 கோடி மதிப்பீட்டில் பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியானது நகர் பகுதிகளில் உள்ள சிறிய ஏரிகள், நீர்நிலைகளை தூர்வாருவதற்கும் சரியாகி விடுகிறது. இதனால் சிறுசேரி கால்வாய் தூர்வாரும் பணியை மேற்கொள்ள, நீர்வளத்துறை மற்றும் சென்னை நதி மறுசீரமைப்பு அறக்கட்டளையுடன் இணைந்து பணியை செயல்படுத்த திட்டமிடப்பட்டது. இதுதொடர்பாக ஒப்பந்ததாரர்கள் நிர்ணயிக்கப்பட்டனர். ஆனால் தற்போது நிதி ஒதுக்க முடியாத காரணத்தால் இப்பணிகளை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத் திட்டப் பணிக்கான நிதி ஒதுக்கப்படும் பட்சத்தில் உடனடியாக இப்பணியை தொடர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post 5 கி.மீ தூர கால்வாயில் 1.5 கி.மீ வரை குப்பை அடைப்பு: குப்பைக் கழிவுகளால் சேதமடைந்த சிறுசேரி கால்வாய்; பருவமழை தொடங்கும் முன்பே தூர்வார கோரிக்கை appeared first on Dinakaran.