×
Saravana Stores

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விமான பயிற்சி மையம் அமைக்க முதற்கட்ட பணி தொடக்கம்: திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரியது டிட்கோ; திறமையான விமானிகளை உருவாக்க திட்டம்

சென்னை: கோவில்பட்டியில் விமான பயிற்சி மையம் அமைப்பதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்க டிட்கோ நிறுவனம் டெண்டர் கோரி முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் விமான சேவைகளை விரிவாக்கம் செய்ய, உதான் திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. முக்கிய நகரங்களில் புதிய விமான நிலையங்கள் கட்டப்பட உள்ளன. இதற்கு ஏற்ப, நம் நாட்டில் விமானத்தை இயக்க, பயிற்சி பெற்ற விமானிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்த பயிற்சியை அளிக்கும் நிறுவனங்கள் வெகு குறைவாகவே உள்ளன. இதனால், பலரும் விமான பயிற்சி பெற ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து நாடுகளுக்கு செல்கின்றனர்.

எனவே, தமிழ்நாட்டில் விமான பயிற்சி நிறுவனங்களை உருவாக்க, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் திட்டமிட்டது. இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலும், சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானிலும் விமான பயிற்சி மையங்களை அமைக்க அரசு முடிவு செய்தது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தோணுகால் ஊராட்சி பகுதியில் உள்ள விமான ஓடுதளம் விமான பயிற்சி மையத்துக்கு பயன்படுத்தப்படும் என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், அப்போதைய தொழில் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார். தோணுகால் கிராமத்தில் மொட்டை மலை அடிவாரத்தில் 1.2 கிமீ நீளம் மற்றும் 15 மீட்டர் அகலத்தில் விமான ஓடுதளம் அமைந்துள்ளது. நாலாட்டின் புதூர் மற்றும் தோணுகால் ஆகிய இரு கிராமங்களில் 63 ஹெக்டேர் நிலத்தில் அமைந்துள்ள இந்த ஓடுதளம் கடந்த 1998ம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது.

தமிழ்நாடு முதல்வரின் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க 50 வகையான தனித்திறன் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் விமானம் ஓட்டுவதற்கான பயிற்சி மையம் அமைக்கும் திட்டம் உள்ளது. அதனடிப்படையில், இந்தியாவிலேயே விமான பயிற்சிக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஆனால், இங்கு விமான பயிற்சி நிலையம் இல்லாத சூழல் என்பது நிலவி வந்தது. இந்தக் குறையை போக்குவதற்கும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கும், விமானி பயிற்சிக்கான மையம் அமைப்பதற்கும் தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.

அந்தவகையில்தான் இந்த கோவில்பட்டி-தோணுகால் ஊராட்சி பகுதியில் அரசிற்கு சொந்தமான பயன்பாடு இன்றி கிடக்கும் ஓடுதளத்தில் விமான பயிற்சி மையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதுதொடர்பான கருத்துரைகளை மாவட்ட ஆட்சியர் அரசிடம் சமர்ப்பித்திருந்தார். இந்த பகுதியில் பயிற்சி மையம் அமைக்க தேவையான சுமார் 35 ஏக்கர் நிலம் உள்ளதால் நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது என கண்டறியப்பட்டது. குறிப்பாக, தூத்துக்குடி, மதுரை, திருவனந்தபுரம் விமான நிலையங்கள் அருகேயே இருப்பதால் விமான பயிற்சிக்கு ஏதுவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக திட்ட இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தொழில்நுட்ப வல்லுநர்கள் கோவில்பட்டி அருகே தோணுகால் ஊராட்சி மொட்டை மலை அடிவாரத்தில் உள்ள விமான ஓடுதள பாதையை ஆய்வு செய்தனர். இந்த ஓடுதளம் கடந்த 20 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ள நிலையில், ஓடுதளத்தை பழுதுபார்த்தால் பயன்படுத்த முடியும் என அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், இதனை சீரமைப்பதன் மூலம் 10க்கும் மேற்பட்ட பயிற்சி விமானங்களை கையாள முடியும் என்பதை கண்டறிந்தனர்.

இந்நிலையில் கோவில்பட்டி-தோணுகால் விமான ஓடுபாதையில் அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டிற்கான திட்ட அறிக்கை, விரிவான பொறியியல் மற்றும் திட்ட மேலாண்மை ஆலோசனை சேவைகளுக்கான ஆலோசகர்கள் தேர்வு, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (டிட்கோ) சார்பாக டெண்டர் வெளியிட்டு முதற்கட்ட பணிகளை தொடங்கியுள்ளது. ஏற்கனவே, விமான பயிற்சி நிறுவனம் அமைப்பதற்கான ஆபரேட்டரை தேர்வு செய்ய டெண்டர் டிட்கோ நிறுவனம் கோரி இருந்தது. தற்போது கோவில்பட்டியில் இருக்கும் இந்த விமான ஓடுதளம் 2ம் உலகப்போரின் போது ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டு, அதனை பயன்படுத்திதான் போர் விமானங்களை இயக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பயிற்சி மையம் அமைக்க தேவையான சுமார் 35 ஏக்கர் நிலம் உள்ளதால் நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

The post தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் விமான பயிற்சி மையம் அமைக்க முதற்கட்ட பணி தொடக்கம்: திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் கோரியது டிட்கோ; திறமையான விமானிகளை உருவாக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Kovilpatti, Tuticorin district ,DITCO ,CHENNAI ,Kovilpatti ,Union Government ,Kovilpatti, Thoothukudi ,Dinakaran ,
× RELATED சென்னை போரூர் அருகே மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை