×

பனப்பாக்கத்தில் நாளை தொழிற்பூங்கா அடிக்கல் நாட்டு விழா முதல்வர் பங்கேற்கும் விழா பாதுகாப்பு பணியில் 1,600 போலீசார்

*விழா மேடையை அமைச்சர் ஆய்வு

* கிராமமே விழாக்கோலம் பூண்டது

நெமிலி : நெமிலி அடுத்த பனப்பாக்கத்தில் அமைய உள்ள தொழில் பூங்கா அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையொட்டி பாதுகாப்பு பணியில் 1,600 போலீசார் ஈடுபடுகின்றனர். மேலும் விழா மேடைகளை கலெக்டருடன் அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு செய்தார். இந்த விழாவையொட்டி கிராமமே விழா கோலம் பூண்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த பனப்பாக்கத்தில் 1213 ஏக்கர் பரப்பளவில் புதியதாக தொழில் பூங்கா அமைய உள்ளது. ரூ.9000 கோடி மதிப்பீட்டில் முன்னணி நிறுவனம் டாடா நிறுவனத்தின் கார்கள் தயாரிக்கும் ஆலை, அதனைத் தொடர்ந்துரூ.400 கோடி மதிப்பீட்டில் காலணி தொழிற்சாலையும் அமைய உள்ளது. சிப்காட்டில் புதிதாக துவங்கப்பட உள்ள தொழில் பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 11 மணி அளவில் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைக்க உள்ளார்.

இதற்காக தொழிற்சாலை அமையும் இடங்களில் புதிய சாலைகள், மேம்பாலம் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகிறது. மேலும் முதல்வர் வருகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. அமைச்சர் ஆர்‌.காந்தி தலைமையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பனப்பாக்கம் சிப்காட் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்ட வருவதால் விழா ஏற்பாடு பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் கலெக்டர் சந்திரகலா ஆகியோர் நேற்று மாலை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது விழா ஏற்பாடு பணிகளை கேட்டறிந்தனர். அப்போது ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன், டிஆர்ஓ சுரேஷ், ஆர்டிஓ பாத்திமா, தாசில்தார் ஜெயபிரகாஷ், அகவலம் ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணவேணி வெங்கடேசன், மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.சிப்காட் தொழில் பூங்காவில் அமைய உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார்.

இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் வருகை யொட்டி ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் டிரோன்கள் மற்றும் ஆளில்லாத வான்வழி வாகனங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி உத்தரவிட்டுள்ளார். பாதுகாப்பு காரணமாக டிரோன்கள் மற்றும் ஆளில்லாத வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்பி கிரண் ஸ்ருதி தெரிவித்தார்.

இதையடுத்து நெமிலி அடுத்த பனப்பாக்கம் சிப்காட் பகுதியில் முதல்வர் வருகையொட்டி 2 டிஜிபிக்கள், 4 எஸ்பிக்கள், 17 ஏடிஎஸ்பிக்கள், 34 இன்ஸ்பெக்டர்கள் உட்பட ஆயிரத்து 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதற்காக தற்போது பாதுகாப்புக்காக பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் நெமிலி அடுத்த பனப்பாக்கம் பகுதி முழுவதும் நாளை நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவையொட்டி தோரணங்கள் கட்டி விழா கோலம் பூண்டுள்ளது.

The post பனப்பாக்கத்தில் நாளை தொழிற்பூங்கா அடிக்கல் நாட்டு விழா முதல்வர் பங்கேற்கும் விழா பாதுகாப்பு பணியில் 1,600 போலீசார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Panappakkam ,Nemili ,M.K.Stal ,Industrial ,Park ,
× RELATED ராணிப்பேட்டையில் ரூ.1,500 கோடியில் காலணி...