- நூற்றாண்டு பேருந்து நிலையம்
- உடுமல
- உடுமலை
- நகராட்சி நூற்றாண்டு பேருந்து
- உடுமலை நகராட்சி
- திருப்பூர் மாவட்டம்
- உடுமால்
- தின மலர்
*விரைவில் திறப்பு
உடுமலை : உடுமலையில் ரூ.3.75 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் நகராட்சி நூற்றாண்டு பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாக உடுமலை நகராட்சி உள்ளது. ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். உடுமலை நகராட்சி உருவாகி தற்போது நூற்றாண்டு விழா கொண்டாடி வருகிறது.
உடுமலை நகரின் அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப பெரியகடை வீதி காமராஜர் சிலை அருகே சிறிய பேருந்து நிலையம் செயல்பட்டது. 1964க்கு முன்பு இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டது. மக்கள் தொகை பெருக பெருக இடநெருக்கடி காரணமாக, பழனி பைபாஸ் சாலையில் வணிக வளாகத்துடன் புதிதாக மத்திய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. பின்னர், இந்த பேருந்து நிலையம் 1996ல் விரிவாக்கம் செய்யப்பட்டது.
திருப்பூர், ஈரோடு மற்றும் மேற்கு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் நிற்கும் வகையில் தனித்தனி ரேக்குகள் அமைக்கப்பட்டன. கழிவறை வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்த பேருந்து நிலையத்திற்கு தற்போது 300 பேருந்துகள் தினசரி வந்து செல்கின்றன. மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளுக்கு மட்டும் 250க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.உடுமலை நகரம் மட்டுமின்றி, சுற்று வட்டார கிராமங்களிலும் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. அலுவலகங்களுக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள், வியாபாரம் விஷயமாக வருபவர்கள் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து உடுமலை நகருக்கே வரவேண்டி உள்ளது.
இதனால், பேருந்துகளில் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. அதற்கேற்ப கூடுதல் பேருந்துகள் இல்லாததால், பேருந்து நிலையத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. மேலும், பேருந்து நிலையம் பகுதியில் கடைவீதி, ராஜேந்திரா சாலை சந்தை, அரசு மருத்துவமனை ஆகியவை உள்ளன. எனவே, உடுமலை நகரின் மைய பகுதியில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்து வசதிகளை ஏற்படுத்தினால் அதிகளவில் பேருந்துகளை இயக்க முடியும் என பொதுநல அமைப்பினர், வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, உடுமலை நகராட்சியின் நூற்றாண்டு விழாவையொட்டி, தற்போதைய பேருந்து நிலையம் அருகில் விரிவாக்க கட்டிடம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.3.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.பேருந்து நிலையம் அருகே இருந்த வி.பி.புரத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே குடிசை வீடுகள் அகற்றப்பட்டு இடம் காலியாக இருந்தது. அந்த இடத்தில் நூற்றாண்டு பேருந்து நிலைய கட்டுமான பணிகள் துவங்கின.
இரண்டு தளங்கள் கொண்ட கட்டிடத்தில், தரை தளத்தில் 12 கடைகளும், மேல் தளத்தில் 7 கடைகளும் கட்டப்பட்டுள்ளன. மேலும் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் ஓய்வெடுக்கும் அறை, கழிவறை ஆகியவை கட்டப்பட்டுள்ளன. பேருந்துகளுக்கான தனித்தனி ரேக்குகள் அமைக்கப்பட்டு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பழனி சாலையில் உள்ள நுழைவு வாயிலில் ‘ஆர்ச்’ கட்டப்பட்டு வருகிறது. அதில் உடுமலை நகராட்சி நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையம் என்ற வாக்கியம் பொறிக்கப்பட்டு வருகிறது. பேருந்து நிலைய சுற்றுச்சுவரில் வண்ண வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. பேருந்து நிலைய பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,“உடுமலை நகராட்சி நூற்றாண்டு பேருந்து நிலையம் ரூ.3.75 கோடி மதிப்பீட்டில் 62 ஆயிரம் சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. கிட்டதட்ட பணிகள் அனைத்தும் முடிந்து விட்டன. நுழைவாயில் ஆர்ச்சில் எழுத்துகள் பொறிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிடும். அதன்பிறகு பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பிறகு கூடுதல் பேருந்துகளை நிறுத்த முடியும். இதனால் நெரிசல் ஏற்படாது” என்றனர்.
The post உடுமலையில் ரூ.3.75 கோடியில் நூற்றாண்டு பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.