×
Saravana Stores

கொள்ளிடம் அருகே வேட்டங்குடி பகுதியில் காஞ்சன் வாய்க்காலை தூர்வார வேண்டும்

*விவசாயிகள் வலியுறுத்தல்

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே வேட்டங்குடி பகுதியில் உள்ள காஞ்சன் பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடகால் கிராமத்தில் பிரதான பொறை வாய்க்காலிலிருந்து பாசன கிளை வாய்க்காலாக பிரிந்து வேட்டுங்குடி, வாடி, கேவரோடை, இருவர்கொல்லை, குடமுரட்டி, சஞ்சீவராயன்கோயில், ஆலங்காடு, கோடங்குடி, வடகால் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2000க்கும் மேற்பட்ட ஏக்கர் விலை நிலங்களுக்கு பாசனம் மற்றும் வடிகால் வசதி அளித்து வரும் பாசன கிளை வாய்க்கால் தான் காஞ்சன் வாய்க்கால் ஆகும்.

இந்த வாய்க்கால் கடந்த இரண்டு வருட காலமாக தூர்வாரி ஆழ் படுத்தாமல் விடப்பட்டதால் வாய்க்கால் முழுமையும் புதர் மண்டியும் தூர்ந்தும் குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கியும் இருந்து வருகிறது. பிரதான பொறை வாய்க்காலில் குறைந்த அளவு தண்ணீர் வந்து கொண்டிருந்த போதிலும் காஞ்சன் வாய்க்கால் தூர்வாரி ஆழ் படுத்தாமல் விடப்பட்டதால் தண்ணீர் இவ்வாய்க்காலின் வழியே வந்து நிலங்களுக்கு பாசனம் அளிக்க முடியாத நிலையில் இருந்து வருகிறது.

அப்பகுதியில் உள்ள விவசாயிகள் இதுவரை இந்த காஞ்சன் வாய்க்கால் பாசனத்தையே நம்பி இருந்து வருகின்றனர். இதனால் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் சம்பா நேரடி விதைப்பு பணியை இதுவரை தொடங்காமல் இருந்து வருகின்றனர். வாய்க்காலில் தண்ணீர் காலம் தாழ்த்தி வந்தும் கிளை வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் வந்து சேராத நிலை இருந்து வருகிறது.நிலங்களை நேரடி விதைப்பு செய்வதற்கு மழைப்பொழிவும் இல்லை.

இதனால் மண்ணில் ஈரப்பதமும் இல்லை வாய்க்காலில் தண்ணீரும் இல்லை இதனால் உழவுப் பணியை கூட மேற்கொள்ள முடியாத நிலையில் இருந்து வருகின்றனர்.இதுகுறித்து முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினரும் காஞ்சன் வாய்க்கால் பாசனதாரர் சங்க செயலாளருமான உதயச்சந்திரன் கூறுகையில், காஞ்சன் வாய்க்கால் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடந்த இரண்டு வருட காலமாக தூர்வாரி ஆழ் படுத்தாமல் இருந்து வருவதால் இப்பகுதியில் உள்ள சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2000க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் சென்று சேர முடியாத நிலை இருந்து வருகிறது.இதனால் சம்பா நேரடி விதைப்பு செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் இருந்து வருகின்றனர்.

வாய்க்காலில் தண்ணீர் வராததால் வடகிழக்கு பருவ மழையை நம்பி எதிர்பார்த்து காத்திருந்து வருகின்றனர். காலம் மிகவும் கடந்து விட்டதால் இப்பகுதியில் சம்பா நேரடி விதைப்பு செய்வது கேள்விக்குறியாகி வருகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள குளங்கள் மற்றும் குட்டைகளில் கூட தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது.இந்த காஞ்சன் வாய்க்காலை ஆரம்ப கட்டத்திலேயே தூர்வாரி ஆழ் படுத்தியிருந்தால் அனைத்து கிராமங்களிலும் உள்ள குளம் குட்டைகளிலும் தண்ணீர் தேங்கி இருக்கும் கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் பயன்பாடாக அமைந்திருக்கும். எனவே போர்க்கால அடிப்படையில் இந்த காஞ்சன் வாய்க்காலை தூர்வாரி ஆழ்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post கொள்ளிடம் அருகே வேட்டங்குடி பகுதியில் காஞ்சன் வாய்க்காலை தூர்வார வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Kanchan ,Vettangudi ,Kollidam ,Kollid ,Vetangudi ,Vadakal ,Mayiladuthurai district ,Dinakaran ,
× RELATED பழையாறு மீன்பிடி துறைமுகத்தில்...