×
Saravana Stores

திருவண்ணாமலையில் நுகர்வோர் பாதுகாப்பு தின விழா கலப்பட, தரமற்ற உணவு பொருட்களால் உடல் நலனுக்கு ஆபத்து ஏற்படும்

*கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேச்சு

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள தின விழா நடந்தது.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நேற்று நடந்தது.

அதையொட்டி, கலெக்டர் அலுவலகத்தில் கலப்பட பொருட்களை கண்டறிவது எப்படி என்கிற விழிப்புணர்வு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார். தொடர்ந்து, விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.பின்னர், கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:

பொருட்களின் தரத்தை அறிந்து வாங்க வேண்டும். கவர்ச்சிகரமான விளம்பரங்களை உண்மை என நம்புவதும், விலை உயர்ந்த பொருட்கள் தரமானதாக இருக்கும் என நினைப்பதும் தவறானது. பால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க ரசாயனத்தை கலக்கின்றனர். உணவு பொருட்களில் கலப்படம் நடக்கிறது. பதப்படுத்தப்பட்ட, பாக்கெட்டில் அடைத்து விற்கிற பல உணவு பொருட்கள் உயிருக்கும், உடல் நலத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. எனவே, நாம் வாங்கும் பொருளின் தரத்தை முழுமையாக அறிந்து வாங்க வேண்டும்.

குறிப்பாக, நெகிழி (பிளாஸ்டிக்) பயன்பாடு மிகப்பெரிய அளவில் ஆபத்தை ஏற்படுத்த கூடியது. எனவே, பிளாஸ்டிக் தாளில் வைத்து உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வாழை இலையை பயன்படுத்த வேண்டும். நாம் வாழும் இடத்துக்கும், சூழலுக்கும் தகுந்தபடி நமது உடல் நிறம், அமைப்பு இருக்கும். ஆனால், விளம்பரங்களை நம்பி அழகுசாதன பொருட்களை பயன்படுத்துவதால் ஆபத்து தான் ஏற்படும். மேலும், மிளகாய் தூள், மஞ்சள் தூள் போன்றவை பளிச்செனும் நிறமாக காட்சியளிக்க, செயற்கை நிறமிகள் சேர்க்கப்படுவது ஆபத்தானது. எனவே, எசசரிக்கையுடன் பொதுமக்கள் இருக்க வேண்டும். அதனால்தான், மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரிக்கும் மசாலா பொருட்களை காலை உணவு திட்டத்துக்கு நம் மாவட்டத்தில் பயன்படுத்த ஏற்பாடு செய்திருக்கிறேன்.

கலப்பட மற்றும் தரமற்ற உணவு பொருட்களால் நம் உடல் நலனுக்கும், உயிருக்கும் ஆபத்து ஏற்படும். எனவே, கலப்பட உணவு பொருட்களை கண்டறியும் விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியம். அதேபோல், நுகர்வோர் உரிமைகள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு நடந்த ஓவியம், கவிதை, கட்டுரை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார். மேலும், மூத்த குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களுக்கும், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும் பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமகிருஷ்ணன், இணைப்பதிவாளர்(கூட்டுறவுச் சங்கங்கள்) பார்த்திபன், நுகர்பொருள் வாணிபக்கழக மணடல மேலாளர் தேன்மொழி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post திருவண்ணாமலையில் நுகர்வோர் பாதுகாப்பு தின விழா கலப்பட, தரமற்ற உணவு பொருட்களால் உடல் நலனுக்கு ஆபத்து ஏற்படும் appeared first on Dinakaran.

Tags : Consumer Protection Day ,Tiruvannamalai ,Collector ,Bhaskara Pandian ,National Consumer Protection Day ,World Consumer Rights Day ,Department of Food Supply and Consumer Protection ,National ,
× RELATED திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில்...