*போலீசார் பேச்சுவார்த்தை
கடலூர் : குப்பை கிடங்கில் இருந்து குப்பைகள் தரம் பிரிக்கும் இயந்திரங்களை ஏற்றி வந்த வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் கம்மியம்பேட்டையில் குப்பை கிடங்கு உள்ளது. இங்கு கடலூர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் சேகரித்து வைக்கப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த குப்பை கிடங்கை சுற்றி வாழும் பொதுமக்கள் இந்த குப்பை கிடங்கினால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்ததால், அந்த பகுதியில் குப்பைகள் சேகரித்து வைக்கப்படுவது நிறுத்தப்பட்டது. இதன்பின்னர் ஏற்கனவே சேகரித்து வைக்கப்பட்ட குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு அகற்றப்பட்டு வந்தன.
இந்நிலையில் நேற்று குப்பைகளை தரம் பிரிக்கும் இயந்திரத்தை ஒப்பந்ததாரர் குப்பை கிடங்கில் இருந்து அகற்றி வாகனம் மூலம் எடுத்துச் சென்றார். இது குறித்து அறிந்த அப்பகுதி பொதுமக்கள், விரைந்து வந்து அந்த வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒப்பந்ததாரர் கூறுகையில், குப்பைகளை தரம் பிரிப்பதற்கான ஒப்பந்தம் முடிவடைந்து விட்டதால், இயந்திரத்தை எடுத்துச் செல்கிறோம் என்று கூறினார். இதனால் இதற்கு பொதுமக்கள் ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், இந்த குப்பை கிடங்கில் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கின்றன. இந்த குப்பைகள் அனைத்தையும் இங்கிருந்து அகற்றிவிட்டு அதன் பின்னரே இயந்திரத்தை எடுத்து செல்ல வேண்டும். இல்லை என்றால் குப்பைகள் அங்கேயே குவிந்து கிடந்து சுற்றுப்புறத்தில் சுகாதார கேடு ஏற்படும், என்று கூறினர்.
இதன் பின்னர் போலீசார் ஒப்பந்ததாரரிடம் பேச்சு வார்த்தை நடத்தி மாநகராட்சியில் இதுகுறித்து தெரிவித்துவிட்டு, அதன் பின்னர் இயந்திரத்தை எடுத்துச் செல்லுங்கள் என்று கூறினர்.
இதை ஏற்ற அவர்கள் மீண்டும் இயந்திரத்தை உள்ளே எடுத்து சென்று குப்பை கிடங்கில் வைத்தனர். இதைப் பார்த்த பொது மக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்களின் இந்த போராட்டத்தால் கம்மியம்பேட்டை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
The post குப்பை கிடங்கில் இருந்து இயந்திரங்களை ஏற்றி வந்த வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் appeared first on Dinakaran.