×

குமரி மாவட்டத்தில் திடீர் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு

*வருடத்திற்கு 5 மாதமே உப்பு விளைச்சல்

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் புத்தளம், மேலப்புத்தளம், கல்விளை, ஆண்டிவிளை, சுவாமிதோப்பு, முருங்கவிளை அருகே உள்ள நீண்டகரை பி, கோவளம் ஆகிய பகுதிகளில் ஏராளமான உப்பு உற்பத்தி செய்யப்படும் உப்பளங்கள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரள மாநிலத்திற்கும் கொண்டு செல்லப்படுகிறது. இது தவிர ஐஸ் கம்பெனிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி செய்வதற்கு பெரிய தடையாக பருவமழை இருந்து வருகிறது. தமிழகத்தில் வேதாரண்யம், தூத்துக்குடி பகுதிகளில் வருடத்திற்கு 9 மாதங்கள் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் உற்பத்தி செய்யப்படும் உப்பு இந்தியாவில் சிறந்த உப்பாக திகழ்ந்து வருகிறது. தூத்துக்குடி உப்பு எந்த விலைக்கு விற்கப்படுகிறோ அந்த விலைக்கு குமரியில் உற்பத்தி செய்யப்படும் உப்பும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

குமரி மாவட்டத்தில் ஜனவரி முதல் மே மாதம் வரை உப்பு உற்பத்தி அதிகமாக இருக்கும். அதனை தவிர தென்மேற்கு பருவமழைக்கும், வடகிழக்கு பருவமழைக்கும் இடையே உள்ள காலகட்டமான ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களிலும் உப்பு உற்பத்தி இருக்கும். ஆனால் முதல் 5 மாதம் உற்பத்தி செய்யப்படும் உப்பின் அளவிற்கு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் உப்பு உற்பத்தி இருக்காது. தற்போது குமரி மாவட்டத்தில் இரண்டாவது சீசன் உப்பு உற்பத்தி நடந்து வரும் நிலையில் கடந்த சில இரு தினங்களுக்கு முன்பு மழை பெய்ததால், உப்பு உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் காலநிலைகள் மாறும்போது உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து உப்பு உற்பத்தி செய்யும் சுவாமிதோப்பை சேர்ந்த பால்நாடார் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கடல் மற்றும் ஆறு சேரும் பொழிமுகத்தில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி சிலர் உப்பு உற்பத்தி செய்கின்றனர். பலர் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுத்த உப்பு உற்பத்தி செய்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் தண்ணீர் 10 டிகிரி வெப்பநிலைக்கு மேல் கிடைத்து வருகிறது. ஆனால் குமரி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி செய்யப்படும் ஆழ்துளை கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் 4 டிகிரி தான் இருந்து வருகிறது. உப்பு தண்ணீரை பாத்தியில் தேக்கி வைக்கும்போது 27 டிகிரி அளவிற்கு தண்ணீர் வெப்பமாகும்போது உப்பு உற்பத்தி ஆகிறது. 27 டிகிரி வெப்பம் கிடைக்கும் அளவிற்கு நாம் தண்ணீரை பாத்திகளில் மாற்றவேண்டும்.

வெயிலின் தாக்கும் அதிமாக இருக்கும்போது பாத்திகள் மாற்றுவது குறைகிறது. 27 டிகிரியில் உப்பு உற்பத்திசெய்யும்போது அந்த உப்பில் தேவையான அனைத்து மூலக்கூறுகளும் சரியாக இருக்கும். ஆனால் 27 டிகிரியில் இருந்து டிகிரி அதிகரிக்கும்போது தேவையில்லாத மூலக்கூறுகள் உற்பத்தியாவதால், அந்த உப்பை நாம் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. குமரி மாவட்டத்தில் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை உப்பு உற்பத்தி இருந்து வருகிறது.

அப்போது ஒரு ஏக்கரில் 80 டன் உப்பு உற்பத்தியாகும். இந்த காலகட்டத்தில் குமரி மாவட்டத்தில் சுமார் 80 ஆயிரம் டன் உப்பு உற்பத்தியாகும். ஆனால் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் ஒரு ஏக்கரில் 20 டன் உப்பு உற்பத்தியாகும். குமரியில் உற்பத்தி செய்யப்படும் உப்பு, 3 தரமாக பிரிக்கப்படுகிறது. முதல்தரம் சமையலுக்கும், 2ம் தரம் தொழிற்சாலைகளுக்கும், 3வது தரம் கால்நடை தீவனங்களுக்கும், ஐஸ் கம்பெனிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

உப்பு உற்பத்தியாகி வரும் நிலையில் சிறிய மழை பெய்தாலும், உப்பு உற்பத்தி பாதிப்பு ஏற்படும். குமரி மாவட்டத்தில் எப்போது மழை பெய்யும் என பார்த்துபார்த்து உப்பு உற்பத்தி செய்யவேண்டியுள்ளது. குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து பலத்த வெயில் அடித்து வந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மழை பெய்தது. இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள உப்பளத்தில் உற்பத்திக்கு தயராக இருந்த உப்புகள் பாதிக்கப்பட்டது. இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். என்றார்.

உப்பளம் தயார்படுத்தல்

தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை பெய்த பிறகு உப்பளங்கள் பாதிக்கப்பட்டு இருக்கும். அதனை மீண்டும் பழையபடி தயார்படுத்தவேண்டும். உப்பளம் தயாரிக்கும்போது பாத்தியில் தண்ணீரை தேக்கி வைக்கும்போது தண்ணீர் தரைக்குள் செல்லாத வகையில் களிமண் போட்டு, அதன்மேல் கடல்மண்ணை போட்டு சரிசெய்ய வேண்டும். கடல் மண் ஏன் போடுகிறார்கள் என்றால், களிமண் இருக்கும்போது உற்பத்தி செய்யப்படும் உப்பு கருப்பாக மாறிவிடும். இதனை தவிர்க்க களிமண் மீது கடல் மண்போடப்படுகிறது.

காலநிலை கைகொடுத்தால் லாபம்

உப்பு உற்பத்திக்கு முக்கியம் உப்புதண்ணீர் மற்றும் வெயில். வெயில் அளவு அதிகமாக இருந்தால், உப்பில் நல்ல விளைச்சல் கிடைக்கும். குமரி மாவட்டத்தில் இருபருவமழை பெய்வதால், வேறு மாவட்டங்களை போன்று இங்கு உப்பு உற்பத்தி செய்ய முடியாத நிலை உள்ளது. பருவமழை சீசன் இல்லாத நேரத்திலும் திடீரென மழை பெய்வதால், பலத்த நஷ்டத்தை உப்பு உற்பத்தியாளர்கள் சந்தித்து வருகின்றனர். காலநிலை கைகொடுக்கும்போது உப்பு உற்பத்தியில் நல்ல லாபம் கிடைக்கும் என பால்நாடார் தெரிவித்தார்.

The post குமரி மாவட்டத்தில் திடீர் மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Kumari district ,Nagercoil ,Puttalam ,Melapputthalam ,Udivilai ,Swamithoppu ,Murungavilai ,Andivlai ,Ndtagarai B ,Kovalam ,
× RELATED உல்லாசமாக இருந்து விட்டு பணம்...