பூதப்பாண்டி : குமரி மாவட்டம் பூதப்பாண்டி சுற்றுவட்டார பகுதிகளில் வனப்பகுதிகள் நிறைந்த கிராமங்கள் உள்ளன. வனப்பகுதிகளில் இருந்து உணவு, தண்ணீர் தேடி கிராமத்துக்குள் நுழையும் யானை, காட்டுப்பன்றி கூட்டம் விளை நிலங்களை சேதப்படுத்திவிட்டு செல்லும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் விவசாயிகள் பயிரிட்டிருந்த வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்திவிட்டு சென்றன. பூதப்பாண்டி அருகே திடலை அடுத்த கடம்படி வளாகம் என்ற வனப்பகுதி கிராமம் உள்ளது. இந்த கிராம மக்கள் தங்களது வயல்களில் நெல், தோட்டங்களில் வாழை, தென்னைகளை பயிரிட்டுள்ளனர்.
இந்தநிலையில் நேற்று முன் தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் கூட்டம் கடம்படி வளாகம் கிராமத்துக்குள் நுழைந்தன. தோவாளை கால்வாய்க்கு கீழ் பகுதியில் உள்ள தோட்டங்களில் புகுந்த யானைகள் வாழைகளை தின்றும், தென்னை மரங்களை ஒடித்து சேதப்படுத்தியும் உள்ளன. இதுவரை நெல் வயலில் புகுந்து யானைகள் சேதப்படுத்தியது இல்லை.
ஆனால் நேற்றுமுன் தினம் இரவு அந்த பகுதியில் உள்ள வயலில் புகுந்த யானை கூட்டங்கள் நெற்பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளன
நேற்று காலை தோட்டம் மற்றும் வயலுக்கு சென்ற விவசாயிகள் பயிர்கள் சேதப்படுத்தப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் ஆர்.டி.ஓ. காளீஸ்வரி, தோவாளை தாசில்தார் கோலப்பன் மற்றும் வனத்துறையினர் கடம்படி வளாகத்துக்கு சென்று சேத விவரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது சுமார் 10 ஏக்கரில் பயிர்களை யானைகள் நாசம் செய்தது தெரியவந்தது.சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். யானைகள் கிராமத்துக்குள் வராதவாறு தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்தனர்.
கலெக்டருக்கு அறிக்கை
நாகர்கோவில் ஆர்டிஒ காளீஸ்வரி யானைக்கூட்டம் வந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். தோவாளை சானல் மீது பாலம் போடப்பட்டது தான் யானைகள் புகுந்ததுக்கு காரணம் என்றும் பாலம் அமைக்க பொதுப்பணித்துறையிடம் அனுமதி ஏதும் பெறப்படவில்லை என்றும் ஆர்டிஒ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டருக்கும் அறிக்கை அளித்துள்ளார்.
The post பூதப்பாண்டி அருகே மீண்டும் வயல், தோட்டத்துக்குள் புகுந்து யானை கூட்டம் அட்டகாசம் appeared first on Dinakaran.