- திருச்சி மாவட்டம்
- திருச்சி
- தமிழ்நாடு அரசு உத்தரவாதக் குழு
- திருச்சிக்கு சட்டசபை
- தமிழ்நாடு சட்டமன்றம்
- கல்லூரி கூடம்
- தின மலர்
திருச்சி, செப்.27: திருச்சி மாவட்டத்திற்கு, சட்டசபையில் அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களும் திருப்தியளிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நேற்று நடந்த கள ஆய்வுக்கு பின்னர் தமிழ்நாடு அரசு உறுதிமொழி குழு தெரிவித்தது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பாக திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பான கள ஆய்வு நேற்று நடந்தது. தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, திருச்சி எம்பி துரைவைகோ மற்றும் அனைத்து துறை அரசு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் திருச்சி கலையரங்கில் தமிழ்நாடு அரசு உறுதிமொழி குழுத்தலைவர் மற்றும் எம்எல்ஏ வேல்முருகன் தலைமையில் நடந்தது.
ஆய்வுக்கூட்டத்துக்கு பின், உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திருச்சி மாவட்டத்தில் 268 உறுதிமொழிகள் குறித்து சட்டசபை உறுதிமொழி குழு ஆய்வு செய்தது.
எங்கள் குழு திருச்சி சுற்றுலா மாளிகையில், நடந்து வரும் ₹3.21 கோடி மதிப்பிலான புதுப்பிக்கும் பணி, வேளாண்மை பொறியியல் கல்லூரியின் பயிற்சி மையத்தில் ₹3 கோடியில் நடந்து வரும் மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்தது. தொடர்ந்து ஆவின் நிறுவனம் சார்பில் ₹23 கோடியில் 6 ஆயிரம் லிட்டர் ஐஸ்கிரீம் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவுவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் இந்த ஐஸ்கிரீம் தொழிற்சாலை நிறுவப்பட்டு ஐஸ் கிரீம் தயாரிப்பு பணிகள் துவங்கப்படும். தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகத்தில் 20 லட்சம் செலவில் ஆராய்ச்சி மையம், அருங்காட்சியம் அமைக்கப்பட்டிருப்பது குறித்தும் ஆய்வு நடந்தது.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2019ம் ஆண்டு ₹1.57 கோடியில் கட்டப்பட்ட அரங்கம் ஆய்வு செய்யப்பட்டது. இக்கட்டிடம் தரமாக இல்லை. கட்டிடத்தில் அதற்குள்ளாகவே விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. சில பகுதிகள் உடைந்துள்ளது. இவற்றை கட்ட ஒப்பந்தம் பெற்ற கட்டுமான நிறுவனத்தின் செலவிலேயே சீரமைக்கவும், சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தை ‘பிளாக் லிஸ்ட்’ செய்யவும் மாவட்ட நிர்வாகத்துக்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்வர் உத்தரவின் பேரில் திருச்சி கோட்டை பகுதியில் ₹3.21 கோடியில் நான்கு அடுக்குகள் கொண்ட சட்ட ஒழுங்கு பிரிவு, குற்றப்பிரிவு, போக்குவரத்து பிரிவு மற்றும் 2 துணை கமிஷனர்களுக்கான அலுவலகம் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருப்பதை குழு உறுதி செய்தது.
திட்டமிட்ட பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வுகள் நீங்கலாக அரசு கலைக்கல்லூரியிலுள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கான விடுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகள் சுகாதாரமற்றதாகவும், சிதிலமடைந்து இருப்பதை ஆய்வுக்குழு கண்டறிந்தது. இவற்றை உடனே மாநகராட்சி கமிஷனர் மூலமாக, மாவட்ட கலெக்டரின் சுயநிதியில் இருந்து, அடுத்த 15 நாட்களுக்குள் சீரமைத்து, புகைப்படங்கள் எடுத்து விபர அறிக்கையை உறுதிமொழி குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆய்வில் ஒன்றிரண்டு தவிர மற்ற பணிகள் திருப்திகராமாக இருப்பதை உறுதிமொழி குழு உறுதிப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உறுதிமொழி குழு ஆய்வு செய்துள்ளது. தொடர்ந்து ஆய்வுகள் நடக்கும் என்றார். பேட்டியின் போது, சட்டப்பேரவை செயலர் சீனிவாசன், உறுதிமொழிக்குழு உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ், அருள் சக்ரபாணி, நல்லதம்பி, மாங்குடி, மோகன், பூமிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
The post திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி அரங்கம் மட்டுமே தரம் குறைவு appeared first on Dinakaran.