×

சட்டசபை தேர்தலில் பாசிசத்திற்கும், அதிமுகவுக்கும் பாடம் புகட்டியதை போல இந்திய அளவில் பாடம் புகட்ட உறுதியேற்போம்: தா.பாண்டியன் புகழஞ்சலி கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் புகழஞ்சலி கூட்டம் சென்னை எழும்பூர் பெரியார் திடலில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தா.பாண்டியனின் திருவுருவப்படத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு திறந்து வைத்தார். இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று புகழஞ்சலி செலுத்தினார். கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பாசிச பாஜகவுக்கும், அடிமை அதிமுகவுக்கும் பாடம் புகட்ட வேண்டிய தேர்தல் வர இருக்கக்கூடிய தேர்தல் என்று குறிப்பிட்டு சொன்னேன். ஏற்கனவே, இந்த பாடத்தை தமிழகத்து மக்கள் புகட்டி விட்டார்கள். ஆனால் இந்திய அளவில் இந்த பாடத்தை யாருக்கு புகட்ட வேண்டுமோ அவர்களுக்கு புகட்டிட வேண்டும். தா.பாண்டியன் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் பொதுமருத்துவமனையில் பல முறை நேரடியாக அவரை சந்தித்தேன். அவர் உடல் நலம் பற்றி நாங்கள் விசாரித்து கொண்டிருப்போம். அதை பற்றி எல்லாம் அவர் பதில் சொல்ல மாட்டார். அரசியலை பேசுவார். நாட்டை பற்றி பேசுவார். மத்தியில் இருக்கக்கூடிய ஆட்சியின் கொடுமைகளை பற்றி சொல்லுவார். ஆக அவரின் அடையாளமே அவரின் தோளில் இருந்த சிவப்பு துண்டு தான். ஜீவாவை போல தமிழகம் முழுவதும் முழங்கி வந்தவர் தான் தா.பா. அவர் புகைப்படத்தை பெரியார் திடலில் ஏற்பாடு செய்திருப்பது மிக, மிக பொருத்தம். திராவிட இயக்கமும், பொதுவுடமை இயக்கமும் இணைந்து பயணிக்க வேண்டும் என்று தா.பா வலியுறுத்தி வந்தார். சிந்தனை சிற்பி சிங்கார வேலரும், தந்தை பெரியாரும், தோழர் ஜீவாவும் இணைந்திருந்த அந்த காலம் போல உருவாக வேண்டும் என்று அடிக்கடி அவர் குறிப்பிட்டு இருக்கிறார். நமக்குள் இருப்பது தேர்தல் உறவு மட்டுமல்ல, கொள்கை உறவு அதை நாம் மறந்து விட வேண்டாம். கம்யூனிச தோழர்கள் சொல்லக்கூடிய பொன்னுலகை உருவாக்க தான் நாம் நினைக்கிறோம். அத்தகைய சுயமரியாதை, சமதர்ம சமூகத்தை உருவாக்க அனைவரும் சேர்ந்து தோழமையுடன் நிச்சயமாக செயல்படுவோம். அதுவே தா.பாண்டியனுக்கு செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  பொதுச் செயலாளர் டி.ராஜா, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்  தலைவர் கே.எம்.காதர்மொகிதீன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் ஏ.எம்.சலீம்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட  தலைவர்கள் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினர். மேலும் கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்….

The post சட்டசபை தேர்தலில் பாசிசத்திற்கும், அதிமுகவுக்கும் பாடம் புகட்டியதை போல இந்திய அளவில் பாடம் புகட்ட உறுதியேற்போம்: தா.பாண்டியன் புகழஞ்சலி கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Chief Minister ,M.K.Stal ,Pandyan ,Chennai ,Communist Party of India ,Pandian ,Periyar Thiel, Egmore, Chennai ,M. K. Stalin ,Mrs. ,Dinakaran ,
× RELATED பத்மநாபபுரம் தொகுதி முன்னாள்...