நியூயார்க்: இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா போராளிகள் உடனடியாக 21 நாள் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. காசா போர் தற்போது லெபனான் நாட்டிலும் நீண்டுள்ளது. இஸ்ரேல் கடந்த சில நாட்களான விமானப்படை மூலம் நடத்தி வரும் வான்வெளி தாக்குதலில் இதுவரை லெபனானில் 600க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். பதிலடியாக இஸ்ரேல் முக்கிய நகரங்களை குறிவைத்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா போராளிகள் ராக்கெட் தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.
இருதரப்பிலும் போர் உக்கிரம் அடைந்துள்ளது. இதற்கிடையே லெபனானை குறிவைத்து தரைவழி தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் அறிவித்து உள்ளது. இந்த நிலையில் நேற்று தெற்கு மற்றும் கிழக்கு லெபனான் முழுவதும் இஸ்ரேல் ஒரே இரவில் 75 தளங்களை தாக்கி அழித்தது. இரவு முழுவதும் குண்டுமழை பொழிந்தன. பதிலடியாக லெபனானில் இருந்தும் 45 ஏவுகணைகள் ஏவப்பட்டன. அவை அனைத்தும் இஸ்ரேல் படைகளால் இடைமறித்து அழிக்கப்பட்டன. இருப்பினும் ஓரிரு ஏவுகணைகள் கட்டிடங்களை தாக்கியதில் அதில் வசித்த மக்கள் பலியானார்கள்.
இந்த நிலையில் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் இந்த போர் விவகாரம் விவாதிக்கப்பட்டது. அப்போது இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா போராளிகள் உடனடியாக 21 நாள் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட பிற நட்பு நாடுகள் நேற்று கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன. இதுதொடர்பாக வெளியான கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: லெபனான்-இஸ்ரேல் எல்லையில் உடனடியாக 21 நாள் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறோம்.
இருதரப்பினரும் இந்த தற்காலிக அழைப்புக்கு பதில் அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டறிக்கையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் இந்த போர் நிறுத்த அழைப்பை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஐநா பொதுச்சபையில் உரையாற்ற அமெரிக்கா சென்ற இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு இதுபற்றி கூறுகையில்,’ போர் நிறுத்தம் இல்லை’ என்று உறுதிபட தெரிவித்தார். நெத்தன்யாகு அமெரிக்கா சென்றாலும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா குழுக்களை குறிவைத்தும், காசாவிலும் இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருவதாக இஸ்ரேல் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் அமெரிக்கா உள்ளிட்ட போர் நிறுத்த அழைப்புக்கு ஹிஸ்புல்லா போராளிகளும் எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை.
* ஹிஸ்புல்லா இயக்கத்தின் டிரோன் கமாண்டர் பலி
இஸ்ரேல் நேற்று நடத்திய அதிரடி தாக்குதலில் பெய்ரூட் புறநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த ஹிஸ்புல்லா இயக்கத்தின் டிரோன் கமாண்டர் பலியானார். அவரது பெயர் மொகமது உசைன் சூர். இந்த தகவலை ஹிஸ்புல்லா குழுவினர் உறுதிப்படுத்தவில்லை.
* இஸ்ரேல் வான்வெளி தாக்குதலில் 23 சிரியா தொழிலாளர்கள் பலி
லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சிரியா நாட்டு தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வசிக்கும் கட்டிடம் மீது குண்டு விழுந்ததில் 23 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்தனர். லெபனானின் வடகிழக்கு பெக்கா பள்ளத்தாக்கில் உள்ள பண்டைய நகரமான பால்பெக் அருகே சிரியா எல்லை பகுதியில் இந்த தாக்குதல் நடந்தது. இதில் பலியான 23 சிரியா நாட்டு தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக யூனைன் கிராமத்தின் மேயர் அலி கசாஸ் கூறினார்.
* வெற்றி கிடைக்கும் வரை போர் தொடரும்
இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், பிரதமர் நெத்தன்யாகு அமெரிக்கா சென்றுள்ளார். போரில் வெற்றி வரும் வரை முழு பலத்துடன் இஸ்ரேல் போரிடும். எல்லையில் இஸ்ரேல் குடிமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகளை இஸ்ரேலிய ராணுவம் தொடர்ந்து தாக்கி வருகிறது’ என்று தெரிவித்தார்.
* லெபனானை விட்டு வெளியேற இந்தியர்களுக்கு அதிரடி உத்தரவு
வன்முறை அதிகரித்து வருவதால் லெபனானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களை எச்சரித்து உள்ளது. அதில்,’லெபனானில் ஏற்கனவே உள்ள அனைத்து இந்தியர்களும் லெபனானை விட்டு வெளியேறுமாறு கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள். முக்கிய காரணத்திற்காக தங்கியிருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தங்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்துடன் எங்கள் மின்னஞ்சல் ஐடி: cons.beirut@mea.gov.in அல்லது அவசர தொலைபேசி எண் +96176860128 மூலம் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளது.
The post இஸ்ரேல், ஹிஸ்புல்லா போரை 21 நாள் நிறுத்த வேண்டும்: அமெரிக்கா, நட்பு நாடுகள் அழைப்பு appeared first on Dinakaran.